நாடாளுமன்றத்தை கலைத்தது சட்டப்படி செல்லுமா?

இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் பரபரப்பு அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி மஹிந்த ராஜபக்ஷவை இலங்கையின் பிரதமராக ஜனாதிபதி மைத்திரிபால நியமித்ததை அடுத்து அரசில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில், நவம்பர் 9ஆம் தேதி நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, 2019 ஜனவரி 5ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி வெளியிடுள்ள வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், உயர் நீதிமன்றத்தின் கருத்தை கேட்காமல் தேர்தலை நடத்த முடியாது என சுயாதீன ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனவரி 5ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழுத் தலைவரின் கருத்து, அரசியல் முரண்பாடு இருப்பதைத் தெளிவாகக் காட்டுவதாக தென் இலங்கை அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்தார்.

19ஆவது அரசியலமைப்பின் பிரகாரம், நாடாளுமன்றம் அமைக்கப்பட்டு, நான்கரை ஆண்டுகள் முடியும் வரையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை என அரசியலமைப்பில் நிபுணத்துவம் பெற்ற சட்ட வல்லுநர்கள் சிலர் பிபிசிக்குத் தெரிவித்தனர்.

எனினும், ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதிகாரம் இருப்பதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா உள்ளிட்ட சிலர் கூறுகின்றனர்.

2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்ட 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கமைய, நாடாளுமன்றத்தைக் கலைப்பது குறித்து அரசியலமைப்பின் 33 மற்றும் 70 ஆகிய இரண்டு இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நான்கரை ஆண்டுகள் வரை நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. அஜித் பி பெரேரா பேசினார். ”நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது. சட்டத்திற்கு முரணான எந்தவொரு உத்தரவையும் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஏற்கக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம்” என்று கூறினார்.

”இரத்தம் சிந்தாத வகையில் இந்த நெருக்கடியைத் தீர்க்குமாறு நாம் தேர்தல் ஆணைக்குழுத் தலைவரிடம் கேட்கிறோம்” என்று அவர் மேலும் கூறினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, ஸ்திரமற்ற நிலையை சரியாக்க நாடாளுமன்றத்தைக் கூட்டி, ஜனநாயகத்தை நிலைநாட்டுமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அப்போதுதான் 9ஆம் தேதி நள்ளிரவு ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்தார்.

எட்டாவது நாடாளுமன்றம்

கலைக்கப்பட்டுள்ள எட்டாவது நாடாளுமன்றம் மூன்று வருடங்கள் மட்டுமே நீடித்தது.

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி எட்டாவது நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடத்தப்பட்டது. இதில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி, 13 போனஸ் ஆசனங்களுடன் 106 ஆசனங்களைக் கைப்பற்றியது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 12 போனஸ் ஆசனங்களுடன் மொத்தமாக 95 ஆசனங்களைக் கைப்பற்றியது.

இலங்கை தமிழரசுக்கட்சி இரண்டு போனஸ் ஆசனங்களுடன் 16 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஜே.வி.பி இரண்டு போனஸ் ஆசனங்களுடன் 6 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஈ.பி.டி.பி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன தலா ஒவ்வொரு ஆசனங்களைக் கைப்பற்றின.

தேர்தலின் பின்னர் எட்டாவது நாடாளுமன்றம் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் முதலாம் தேதி கூடியது.

இந்த நிலையில், 2018ஆம் ஆண்டு 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று நாடாளுமன்றம் ஜனாதிபதியின் அதிவிசேட வர்த்தமானி மூலம் கலைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி என்றழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் ஜனாதிபதியின் உத்தரவிற்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாக தனித்தனியாக அறிவித்துள்ளன.

Related posts