எதிர்க்கட்சித் தலைவர் யார்? ரணிலா? சம்பந்தனா?

பாராளுமன்றம் 14 ஆம் திகதி கூடவுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்ந்தும் இரா. சம்பந்தனுக்கா? அல்லது ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கா? என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுப்பப்படுகிறது. பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ பதவியேற்றுள்ள நிலையில் பாராளுமன்றத்தில் பிரதமருக்கான ஆசனத்தை அவருக்கு வழங்குவதற்கு சபாநாயகர் இணக்கம் தெரிவித்துள்ளார். எனினும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தை வழங்குவது தொடர்பில் இதுவரை எவ்வித உத்தியோகபூர்வமான அறிவிப்புக்களும் முன்வைக்கப்படவில்லை.

பாராளுமன்றம் கூடுவதற்கு இன்னும் ஐந்து தினங்களேயுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவருக்கான ஆசனத்தில் யார் அமரப் போகிறார்கள் என்பது இன்னமும் தீர்மானிக்கப்படாமலேயே உள்ளது. பிரதமருக்குரிய ஆசனத்தில் மஹிந்த ராஜபக்ஷ அமரவுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவருக்கான ஆசனத்தில் ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க அமர்வாரா? என்பதை அறிவதற்காக அரசியல்வாதிகளும் மக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இரண்டாவது பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியே பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டும்.

இதில் மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. எனினும் சபாநாயகர் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் அதனை ஐ.தே.கவுக்கு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். அதனடிப்படையிலேயே எதிர்க் கட்சித் தலைவராக யாரை நியமிப்பது என்பது தொடர்பில் ஐ.தே.க உறுப்பினர்கள் தங்களுக்குள் கூடி ஆராய முடியும். எவ்வாறாயினும் இவ்விடயம் தொடர்பில் சபாநாயகர் ஐ.தே.கவுக்கு அறிவிக்காமல் கால இழுத்தடிப்பு செய்வதாகவும் சுதந்திரக் கட்சி வட்டாரத்தில் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம், ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் பதவியையோ அல்லது எதிர்க்கட்சிப் பொறுப்பையோ ஏற்க மறுக்கும்பட்சத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் ஒப்பந்தம் அடிப்படையில் இணைந்து செயலாற்றக்கூடியதொரு நிலைமை உருவாகலாமென்றும் பாராளுமன்ற வட்டாரம் தெரிவிக்கின்றது.

ஐ.தே.க வும் கூட்டமைப்பினரும் இணைந்து உருவாக்கும் ஒப்பந்தத்தை பாராளுமன்றத்தில் முறைப்படி முன்வைத்து அதனை சபாநாயகர் அறிவிப்பாராயின் ஐ.தே.கவன்றி கூட்டமைப்பைச் சேர்ந்த இரா.சம்பந்தனே தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக பாராளுமன்றத்தில் செயலாற்ற முடியும் என்றும் பாராளுமன்றத்தின் உயரதிகாரிகள் கூறுகின்றனர்.

எது எவ்வாறாயினும், அடுத்து வரும் ஐந்து நாட்களுக்குள் சபாநாயகர் எதிர்க்கட்சியாக செயற்படுமாறு ஐ.தே.க வுக்கு உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விடுக்கும் அதேநேரம் எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர், எதிர்க்கட்சித் தலைவர் ஆசனம் யாருக்கு என்பதை ஐ.தே.க முடிவு செய்ய வேண்டும்.

Related posts