முருகதாஸ் முன் ஜாமீன் கைது செய்ய தடை

சர்கார் பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை வரும் நவ. 27 வரை கைது செய்ய உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய சர்கார் திரைப்படம் கடந்த செவ்வாய்க்கிழமை தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியானது. திரைப்படத்தில், அரசு மக்களுக்கு தரும் இலவச பொருட்களை கொச்சைப்படுத்தியிருப்பதாகவும், வில்லிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என கூறப்படும் ‘கோமளவல்லி’ என காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. இது அதிமுகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.

சர்கார் திரைப்படக் குழுவினர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். மேலும், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, மதுரை உட்பட பல மாவட்டங்களில் சர்கார் திரையிடப்படும் திரையரங்குகளில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பேனர்களை கிழித்தனர்.

இதையடுத்து, சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழுவினர் ஒப்புக்கொண்டனர். இந்நிலையில், நேற்றிரவு ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்வதற்காக போலீஸ் சென்றதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. வழக்கமான பாதுகாப்புக்காகவே சென்றதாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, போலீஸார் தனது வீட்டுக் கதவை பலமுறை தட்டியதாகவும், தான் அங்கு இல்லையென்றதும் அங்கிருந்து கிளம்பிவிட்டதாகவும், ஏ.ஆர்.முருகதாஸ் ட்வீட்டரில் பதிவிட்டிருந்தார். தமிழக சட்டத்துறை அமைச்சர் தலைமை வழக்கறிஞருடன் ஆலோசனை, அதிமுகவினர் எதிர்ப்பு, போலீஸ் வந்தது போன்ற காரணங்களால் தன்னை போலீஸார் கைது செய்யக்கூடும் என இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அவரது மனுவில் பட விவகாரம் மிகத்தீவிரமாக உள்ளதாகவும், படம் சென்சார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டதாகவும், தற்போது தேவையற்ற முறையில் அதிமுகவினர் பிரச்சினை எழுப்பி வருவதாகவும், மேலும் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக போராட்டங்கள் நடந்து வருகிறது, ஆனால் திரைப்படமாக மட்டுமே தாங்கள் எடுத்துள்ளதாகவும் தெரிவித்து தற்போதுள்ள நிலையில் தன்னை கைது செய்யலாம் என்பதால் முன் ஜாமீன் வழங்கும்படி கோரியிருந்தார்.

இந்தவழக்கு விசாரணை நீதிபதி இளந்திரையன் முன் வந்தது. அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புகார் மீது விசாரணை நடந்து வருகிறது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

அப்போது வழக்கு விசாரணை முடியும்வரை முருகதாசை கைது செய்ய கூடாது என உத்தரவிட்டார். இதுவரை என்ன புகாருக்காக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு அரசுதலைமை வழக்கறிஞர் அரசின் திட்டங்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதிமுக தொண்டர்களிடையே குழப்பத்தையும், தேவையற்ற அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.

பின்னர் உத்தரவிட்ட நீதிபதி இந்த வழக்கில் வரும் நவம்பர் 27-ம் தேதி வரை ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

Related posts