டென்மார்க்கில் செல்வா பாண்டியர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

தமிழர் தேசிய தந்தை என்று போற்றப்படும் தோழர் செல்வா பாண்டியரின் பிறந்த நாள் விழா நேற்று உலகின் பல பாகங்களிலும் பேரெழுச்சியுடன் கொண்டாடப்பட்டது.

அந்தவகையில் டென்மார்க்கிலும் கொண்டாடப்பட்டது. டென்மார்க்கில் உள்ள தமிழ் படைப்புக்களை உலக மன்றுக்கு கொண்டு சென்றவர் செல்வா பாண்டியர்.

ஓர் ஈழத் தமிழனால் முடியாத தொலைவுக்கு முள்ளிவாய்க்கால் சோகங்களை தமிழகத்தின் பட்டி தொட்டி என்று கொண்டு சென்றவர் செல்வா பாண்டியர்.

சென்னையில் ஒரு வாகனத்தை அமைத்து கன்னியாகுமரிவரை அறிஞர்களை சந்தித்து டென்மார்க் எழுத்தாளர் கி.செ.துரை எழுதிய புதுமாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து என்ற நூலை கொண்டு சென்று நம்பிக்கையை விதைத்தவர்.

அவருடைய பிறந்தநாள் டென்மார்க்கில் நேற்று கொண்டாடப்பட்டது. பெண் விமானி அர்ச்சனா தொடக்கி வைக்க, ரியூப்தமிழ் அதிபர் ரவிசங்கர் கேக் வெட்ட நிகழ்வு நடைபெற்றது.

இது குறித்து தமிழர் நடுவம் வெளியிட்டுள்ள அறிக்கை :

தமிழர் என்கிற தனிப்பெரும் தேசிய இனத்தின் அரசியல் மற்றும் சமூக விடுதலைக்கான போராட்டம் இனி ஈழத்திலோ அல்லது தாய்த் தமிழகத்திலோ இல்லை, அது சர்வதேச தமிழ்ச் சமூகத்திடம் குறிப்பாக சர்வதேச அறிவுசார் தமிழ் இளைஞர்களிடையே ஒப்படைக்கப் பட்டிருக்கிறது என்று முன்பொருமுறை தமிழர் தேசிய தந்தை செல்வா பாண்டியர் பேசியிருப்பார், அதையும் உள்ளீடாக வைத்தே “தமிழர் தேசிய அரசியல்” என்கிற கருத்தியலை கட்டமைத்திருந்தார்,

அவர் விதைத்த விதைகள் யாவும் இன்று பெரும் விருட்சங்களாக செழித்து வளர்ந்து பூத்துக் குலுங்க காத்திருப்பதை கடந்த ஒருவார காலமாக உலகெங்கிலும் இருந்து வரும் தகவல்கள் நமக்கு உணர்த்த துவங்கியிருக்கிறது…!

நேற்று நவம்பர் 07, தமிழர் தேசிய தந்தை செல்வா பாண்டியரின் பிறந்தநாளை முன்னிட்டு டென்மார்க் தேசத்தில் வாழும் தமிழ் இளைஞர்கள் ஒன்றுகூடி எழுத்தாளர் மற்றும் திரைப்பட இயக்குநர் மாஸ்டர் கி.செ.துரை அவர்களின் தலைமையில் இளைஞர்கள் ஒன்றுகூடி “தமிழர் தேசிய எழுச்சி நாளாக” சிறப்பாக கொண்டாடியிருக்கிறார்கள்…!

இளைஞர்களின் வளர்ச்சியில் எப்போதும் சிறப்பு கவனம் செலுத்தும் செல்வா பாண்டியரின் வழிகாட்டுதலின்படி படித்து, சர்வதேச அளவில் முதல் தமிழ் பெண் விமானியாக உருவெடுத்த சகோதரி அர்ச்சனா நிகழ்வை துவக்கி வைக்க, தமிழர் தேசிய எழுச்சி நாள் கேக் வெட்டப்பட்டு பாண்டியரின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப் பட்டது.

மாஸ்டர் கி.செ.துரை அவர்கள் தனது கைப்பட கேக் தயாரித்து, அதில் தமிழர் நடுவத்தின் கொடி மற்றும் பாண்டியரின் புகைப்படத்தை அழகுற வடிவமைத்திருந்தது உலக தமிழர்கள் நடுவத்தின்பால் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் பற்றுதலையும் காட்டுகிறது.

#தமிழர்தேசியஎழுச்சிநாள்
#நவம்பர்7
#தமிழர்நடுவம்

Related posts