நான் ஒரு சதம் கூட மஹிந்த தரப்பிடம் வாங்கவில்லை!

கிழக்கு மாகாணத்திற்கு என அபிவிருத்தி அமைச்சு ஒன்று தேவை என பாராளுமன்றத்தில் பல தடவைகள் எடுத்துக் கூறியதாக பிரதி அமைச்சர் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், வட கிழக்கு அபிவிருத்தி செயலணி கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி குறித்து கதைத்த போது, ஜனாதிபதி, அபிவிருத்தி வேண்டும் என்றால் பொறுப்பெடுங்கள் என்று கூறியதாகவும் அதற்கு இணங்கவே ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் பதவி ஏற்றதாகவும் பிரதி அமைச்சர் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் ஒரு சதம் கூட மஹிந்த தரப்பிடம் இருந்து வாங்கவில்லை எனவும் பிரதி அமைச்சர் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் பிரதேச அபிவிருத்தி (கிழக்கு மாகாண அபிவிருத்தி) பிரதி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டதை அடுத்து இன்று (05) அவரது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இக்கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

——————–
புதிய அரசாங்கம் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில் முன்னர் இருந்த நிலைப்பாட்டிலேயே தான் இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வாய்மொழி மூலமாக தந்த வாக்குறுதியின் அடிப்படையில் செயற்பட்டிருந்தால் நவம்பர் 7 ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டி நாட்டை ஸ்தீரமடையச் செய்வது சபாநாயகர் என்ற அடிப்படையில் தனது கடமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்காக தனக்கு ஒத்துழைப்பு வழங்குவது ஜனாதிபதி ஒருவரின் கட​மை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

————-

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹேஷான் விதானகே மற்றும் பாலித தெவரப்பெருமா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் அலரி மாளிகைக்கு அருகில் வைத்து மேஜர் அஜித் பிரசன்னவை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

————

இன்று (05) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொலிஸ் உயர் அதிகாரிகளின் விஷேட கலந்துரையாடல் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர்களை பொலிஸ் தலைமையாகத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸ் மா அதிபர் நேற்று (04) காலை உத்தரவிட்டிருந்தார்.

எவ்வாறாயினும் நேற்று மாலை மீண்டும் பொலிஸ் மா அதிபரினால் குறித்த கலந்துரையாடல் இன்று நடைபெறாது என தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் குறித்த கலந்துரையாடலுக்காக வேறு தினத்தை விரைவில் வழங்குவதாகவும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெறுகின்ற மக்கள் ஆர்ப்பாட்ட பேரணியின் காரணமாக இந்த கலந்துரையாடல் இரத்து செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

————

பாராளுமன்றத்தின் புதிய சபை முதல்வராக அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள சபை முதல்வர் காரியாலயத்தில் இன்று காலை இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

—————-

சபாநாயகர் கட்சி ரீதியாகவும் கட்சிக்கு ஆதரவாகவும் அறிக்கை வெளியிடுவது அரசியலமைப்பிற்கு எதிரானது என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் சரத் அமுனுகம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.

இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டு புதிய அரசாங்கம் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில் முன்னர் இருந்த நிலைப்பாட்டிலேயே தான் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கையை தாங்கள் கண்டிப்பதாகவும் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசியல் ரீதியான நெருக்கடியாக நிலமையை நாட்டிற்குள் ஏற்படுத்தும் விதமாக இந்த அறிக்கை சபாநாயகரினால் வெளியிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.

—————–

தமிழ் மக்களுக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தரக்கூடிய வகையில் அரசியல் யாப்பை அமுல் படுத்தவேண்டும் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, மகிந்த ராஜபக்ஷவை தமிழ் மக்களிடம் இறைவன் மண்டியிட வைத்துள்ளான். இது அறத்தின் பால் வழங்கப்பட்டிருக்கின்ற ஒரு தீர்ப்பாகும் எனவும் தெரிவித்தார்.

தமிழ்மக்களின் உரிமைக்கான போராட்டத்தை நசிக்கியது மட்டுமல்லாது பல்லாயிரக்கணக்கான தமிழர்களை முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்று கொத்துக்கொத்தாக கொன்று குவித்து விட்டு இன்று அதே தமிழ் மக்களிடம் வந்து தான் ஆட்சியில் இருப்பதற்காக மண்டியிடுகின்றார் முன்னாள் ஜனாதிபதி.

இன்று இலங்கையில் யார் ஆட்சியில் இருக்க வேண்டுமென்ற தீர்மானத்தை எடுக்கின்ற சக்தியை தமிழ் மக்கள், தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கியிருக்கின்றார்கள்,

இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மகிந்த அமைச்சுப் பதவி வழங்குவதாகவும் கோடிக்கணக்கில் பணம் வழங்குவதாகவும் பேரம் பேசி வருகின்றார்.

இந்த மண்ணின் விடுதலைக்காக தங்கள் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களினதும் மக்களினதும் உயிர்களுக்கு யாரும் விலை பேசமுடியாது. இதற்குப் பரிகாரமாக தமிழ் மக்களினுடை அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு தீர்வுத்திட்டத்தை வழங்கவண்டும்.

ஆனால் அவ்வாறு தமிழ் மக்களுக்கு ஒருதீர்வை வழங்குவதற்கு மகிந்த ராஜபக்ச தயாராகவில்லை. தமிழ் மக்களின் பிரதிநதிகளாகிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பராளுமன்ற உறுப்பினர்களை விலை பேசுகின்றார்.

தமிழ் மக்களினடைய இழப்புக்களை ஈடு செய்வதற்கு எவராலும் எந்தவிலையும் பேசமுடியாது.

மாறாக தமிழ் மக்களுக்களின் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தரக்கூடிய வகையில் அரசியல் யாப்பை அமுல் படுத்தவேண்டும். ஐக்கிய நாடுகள் சபையிலே ஏற்படுத்தப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும்.

இதுவே அவர் தமிழ் மக்களுக்கு செய்யும் பரிகாரமாக அமையும். அதைவிடுத்து, தொடர்ந்தும் தமிழ் மக்களை எமாற்றுகின்ற வகையிலேயே தொடர்ந்து செயற்பட்டு வருகின்றார் எனவும் அவர் தெரிவித்தார்.

Related posts