குவைத் நாட்டில் செல்வா பாண்டியர் பிறந்த நாள் ஆரம்பம்

தமிழர் தேசிய தந்தை என்ற கிடைத்தற்கரிய புகழை தனது குறுங்கால வாழ்வில் பெற்று விடை பெற்ற தோழர் செல்வா பாண்டியரின் பிறந்த நாள் உலகத்தின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுகிறது.

அந்தவகையில் முதல் நிகழ்வு குவைத் நாட்டில் வெகு விமரிசையாக நடைபெற்றுள்ளது. குவைத் நாடு என்பது நாம் இன்றைய மத்திய கிழக்கு பிரச்சனையில் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நாடு.. ஆனால் அங்கும் நம் உறவுகள் இருப்பதும் பாண்டியருக்காக கேக் வெட்டி கொண்டாடுவதும் பெரிய விடயமாகும்.

உலகமெல்லாம் தமிழ் மக்களை இணைக்க செல்வா பாண்டியர் எடுத்த முயற்சி நமக்கு நம்ப முடியாத நிகழ்வாக இருக்கிறது. அவர் இருக்கும்வரை அவருடைய பயணத்தின் ஆழம் நமக்கு தெரியவில்லை. அவர் இறந்த பிறகுதான் தெரிகிறது அவருடைய மூளை எவ்வளவு தூரம் ஆழமாகவும் அகலமாகவும் ஓடியிருக்கிறது என்பது.

டென்மார்க்கில் எழுதப்பட்ட கிலரி கிளிண்டன் தோற்றாரா தோற்கடிக்கப்பட்டாரா என்ற நூல், புது மாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து என்ற நூல்களையும் குவைத் வரை கொண்டு சென்றது பாண்டியர் புகழே.

குவைத் பிறந்த நாள் தொடர்பாக நடுவத்தின் முகநூல் தரும் தகவல் இப்படியிருக்கிறது.:

குவைத் தமிழர்களால் தொடங்கிவைக்கப்பட்ட தமிழர் தேசிய எழுச்சி நாள் கொண்டாட்டம்….

சினிமா நடிகர்களும், தனித் தமிழ் புலவர்களும் இன்னும் சில நாடக புரட்சிக் காரர்களும் நமக்கு விடுதலை வாங்கி தந்துவிடுவார்கள் என்றும், கைவிட்டு போன ஆட்சியதிகாரம் மீண்டுவிடும் என்றும் நம்பிக்கொண்டு, தன்னை அறியாமலே ஆரிய திராவிட அரசியல் போதைக்கும், டாஸ்மாக் மதுபான போதைக்கும், திட்டமிட்ட சாதிய சினிமா போதைக்கும் ஊறுகாயாகிக் கொண்டிருந்த தமிழ் இளைஞர்களை தமிழர் நடுவம் என்கிற அரசியல் இயக்கம் துவங்கிய குறுகிய காலத்தில் தன்பால் ஈர்த்து, சின்னச்சின்ன கேள்விகளாலும் எளிமையான விளக்கங்களாலும் வரலாற்று சான்றுகளாலும் தமது ஆளுமையான நடவடிக்கைகளாலும் அவர்களுக்கு புது நம்பிக்கையூட்டி, தமிழர்களின் அகச் சிக்கலை தீர்க்கும் அருமருந்தாக தமிழர் தேசிய கருத்தியலை கட்டமைத்து எப்போதும் சக தமிழர்கள் மீது வெறுப்பையே வீசிக் கொண்டிருந்த தமிழ்ச் சமூகத்தை சற்றே நிதானித்து சிந்திக்கச் செய்து தமிழர்களின் தேசிய இன அரசியலில் புதுப் பாய்ச்சலை நிகழ்த்திக் காட்டிய மேதகு செல்வா பாண்டியரின் பிறந்தநாளை குவைத் வாழ் தமிழர்கள் நேற்று முன்தினம் (02/11/18) தமிழர் தேசிய எழுச்சி நாளாக கொண்டாடியதோடு மட்டுமல்லாமல் இனி இன எதிரிகளின் சூழ்ச்சிக்கு இடம் தராமல் தமிழர்கள் நாம் நம்மிடையே சமூக இணக்கதை கடைபிடிப்போம் என்றும் உறுதிமொழி ஏற்றிருக்கிறார்கள்…!

2/11/18 நேற்று முன்தினம் குவைத்தில் துவங்கிய இந்த தமிழர் தேசிய எழுச்சி நாள் கொண்டாட்டம் மற்றும் உறுதிமொழி ஏற்பானது சிங்கப்பூர், மலேசியா, பர்மா, கத்தார், டென்மார்க், இலங்கை யாழ்ப்பாணம் என உலகில் தமிழர் வாழும் பகுதியெங்கும் பற்றிப் பரவ காத்திருக்கிறது என்பதை எண்ணும்போது தமிழர் தேசிய தந்தை மேதகு செல்வா பாண்டியர் நம்மையெல்லாம் இயக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது…!

எதிர் வரும் காலங்களில் உலக நாடுகள் யாவற்றிலும் உலகத் தமிழர் யாவரும் வெகு விமரிசையாகக் கொண்டாட காத்திருக்கும் தமிழர் தேசிய தந்தை செல்வா பாண்டியரின் பிறந்தநாளை தமிழர் தேசிய எழுச்சி நாளாக முதலாவதாக கொண்டாடிய குவைத் வாழ் தமிழர்களுக்கு தமிழர் நடுவம் தனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதோடு பிற்கால பாண்டியர்களின் தலைநகராம் தென்காசியில் வரும் நவம்பர் 07 ம் தேதி அன்று தமிழர் நடுவத்தின் சார்பாக நடைபெறவிருக்கும் “தமிழர் தேசிய எழுச்சி நாள்” நிகழ்விற்கு உலகத் தமிழர்கள் யாவரையும் கலந்துகொள்ளும்படி அன்போடு அழைக்கிறது.

வெல்க தமிழர்…! வாழ்க தமிழரினம்…!!

Related posts