கலைக்கும் இசைக்கும் பெருமை தந்த திருநாள்

கலைக்கும் இசைக்கும் பெருமை தந்த சாகித்திய சுருதிலயா 20 வது ஆண்டு விழா

டென்மார்க் சங்கீத ஆசிரியை இசைக்கலைமணி சிறீமதி குமுதினி பிறித்விராஜ் அவர்களுடைய சாகித்திய சுருதிலயா இசைக்கல்லூரியின் 20 வது ஆண்டு நேற்று மிகவும் அமர்க்களமாக நடந்தேறியிருக்கிறது.

பெருந்தொகையான பிள்ளைகள் பங்கேற்று தமது இசை ஆற்றலை வெளிப்படுத்தினார்கள். ஒவ்வொரு பிரிவும் அதற்கான வண்ண வண்ண ஆடைகளை அணிந்து அரங்கத்தில் தோன்றியது பட்டாம் பூச்சிகள் பறப்பது போல கண்களுக்கு விருந்தாக இருந்தது.

அழகான அரங்க அமைப்பும், பிள்ளைகளின் ஆற்றலும், ஆசிரியரின் வழிகாட்டலும் பெற்றோரின் ஒத்துழைப்பும் இணைந்து அரங்கு நிறைந்த இந்த நிகழ்வு மக்கள் மனங்களை கவர்ந்தது.

பி.ப 14.30 மணிக்கு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்த நிகழ்வு நள்ளிரவு பன்னிரண்டு மணி தாண்டியும் கலை வேகம் குன்றாமல் நடந்தது ஆச்சரியம் தந்தது. நிiறாக சங்கீத ஆசிரியையின் கச்சேரியும் இடம் பெற்றது நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக இருந்தது.

பல வர்ணங்கள் பலவேறுபட்ட பாடல்கள் என்று அனைத்தும் வித்தியாசமாக இருந்தது. சங்கீத ஆசிரியை குமுதினி பிறித்திவிராஜன் பிரான்சில் இருந்து டென்மார்க் வந்தததில் இருந்து கடந்த 20 வருடங்களாக கல்லூரி பயணித்த பாதையையும் அதன் அனுபவங்களையும் முரளி சர்மா எடுத்துரைத்தார்.

கலாக்கேந்திரா ஆடல் இசைக்கல்லூரி சார்பில் நடன ஆசிரியை திருமதி சுமித்திரா சுகேந்திரா, சங்கீத ஆசிhயை திருமதி துவாரகா செந்தூரன் ஆசிரியையை வாழ்த்தினார்கள்.

பரடைசியா, வைலை, கேர்னிங் உட்பட பல்வேறு நகரங்களில் இருந்தும் மாணவர்களின் வாழ்த்துக்களும் வாழ்த்து மடல்களும் அரங்கத்தை நன்றி பெருக்கு வெள்ளத்தில் மூழ்கடித்தன.

ஆசிரியரைப்பற்றியும் அவரோடு தமக்கிருந்த உறவு நிலை, அவருடைய உதவும் மனம் போன்ற பல்வேறு விடயங்களையும் மாணவிகள் தயாரித்தளித்த காணொளி பேசியது.

வீணை இசைக்கச்சேரியும் சிறப்பாக இடம் பெற்றது. சிறு பிள்ளைகளில் இருந்து ஆரம்பித்து திருமணமான பெரிய பெண்கள் வரை இசை நிகழ்ச்சியில் பங்கேற்று பாடியமை இசை வரலாற்று வளர்ச்சியில் ஒரு முக்கியமான காலடியாக இருந்தது.

ஆசிரியர் கி.செ.துரை சிறப்புரையாற்றும் போது இனிமேல் டென்மார்க் மகாராணியாரின் சாஸ்திரிய சங்கீத பிரிவுக்கு குமுதினி பிறித்திவிராஜனின் நுண்கலை முயற்சிகள் போகும் பருவம் வந்துவிட்டதென எடுத்துரைத்தார்.

நமது நாட்டில் இன்று ஊருக்கு ஒரு சங்கீத வித்துவானை தேடிப்பிடிப்பதே கடினம் ஆனால் புலம் பெயர் நாடுகளிலோ இன்று சங்கீத வித்துவான்களும், வித்தகிகளும் வீட்டுக்கு ஒருவர் இருக்கிறார்கள் என்றால் அதுதான் புலம் பெயர் வாழ்வின் வெற்றியாகும். அத்தகைய வெற்றியின் தூண்களாக இருக்கும் பிறித்திவிராஜன், குமுதினி தம்பதியர் பெரிதும் போற்றப்பட வேண்டியவர்கள் என்றார்.

மிகச்சிறந்த நம்பிக்கை தரும் இசை நிகழ்ச்சியும் ஆண்டுவிழாவும் இந்த ஆண்டின் மிகச்சிறந்த இசை நிகழ்ச்சி என்றால் அது மிகைக்கூற்றல்ல.

அலைகள். 04.11.2018

Related posts