தமிழர் தேசிய எழுச்சி நாளும் செல்வா பாண்டியர் பிறந்த தினமும்

எதிர்வரும் நவம்பர் 7ம் திகதி புதன்கிழமையன்று தமிழர் தேசியத் தந்தை மேதகு செல்வா பாண்டியரின் பிறந்த தினம் தமிழகம் தென்காசி உட்பட உலகின் பல நாடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.

தமிழகத்தில் தென்காசி, சென்னை முதற்கொண்டு பல இடங்களிலும் நடைபெறவுள்ளது. இந்தவகையில் சிறப்பாக இலங்கை யாழ்ப்பாணம், சிங்கப்பூர், மலேசியா, பர்மா, டென்மார்க் ஆகிய நாடுகளிலும் நடைபெற இருப்பது இரட்டிப்பு மகிழ்வாகும்.

இந்த நிகழ்வில் முக்கிய விடயங்களாக தோழர் செல்வா பாண்டியரின் பிரமாண்ட திருவுருவப்படம் திறந்து வைக்கப்படுகிறது. சிங்கப்பூர் தமிழர் நடுவ அமைப்பாளர் திரு. நாகேஸ் முத்து பாண்டியர் திறந்து வைக்கிறார்.

அடுத்தபடியாக பாண்டிய ஒளி என்ற தலைப்பில் சாதனை படைத்த நான்கு இளைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. வருடாவருடம் செல்வா பாண்டியர் பிறந்த தினத்தில் இந்த விருது வழங்கப்படும்.

இது சாதாரணமாக அனைவருக்கும் கேடயம் வழங்குவது போன்ற ஒரு விருதல்ல. இதைப் பெறுவதானால் அபார சாதனைகள் புரிந்திருக்க வேண்டும். அந்தவகையில் இம்முறை நால்வருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் சர்வதேச விருதாக கூர்மைப்படுத்தப்படும்.

மூன்றாவதாக டென்மார்க் கி.செ.துரை எழுதிய உலகப்புகழ் பெற்ற பத்து உதைபந்தாட்ட வீரர்கள் என்ற புத்தகம் வெளியிடப்படுகிறது. பேராசிரியர் கமலேசு பாண்டியர் அறிமுக உரையை நிகழ்த்த இருக்கிறார். இந்த நூல் உலகத்தின் பல பாகங்களிலும் வெளியாகியிருக்கிறது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த செப். 16ம் திகதியன்று அப்போதைய வடக்கு முதல்வர் திரு. சி.வி. விக்னேஸ்வரன் நூலை வெளியிட்டு செல்வா பாண்டியரின் உருவப்படத்தையும் திறந்து வைத்திருந்தார்.

இந்த நூல் தோழர் செல்வா பாண்டியருக்கு சமர்ப்பணமாகவே வெளிவந்திருந்தது. இன்று இலங்கை யாழ்ப்பாணத்தில் இரண்டாவது பதிப்பிற்கு செல்கிறது. ஒரு வாரத்தில் இரண்டாம் பதிப்பு வெளியாகவுள்ளது. ரியூப் தமிழ் நிறுவனம் ஆரம்பிக்கும் புத்தக சந்தையின் முதலாவது நூலாக வெளிவர இருக்கிறது.

தொடர்ந்து நிகழ்ச்சியில்..

பாண்டிய வேந்தர் வரவேற்புரை நிகழ்த்த, தங்கராஜ் பாண்டியர் தலைமை உரை வழங்க, புகழ் பெற்ற பேச்சாளர்களான கோப்மா கருப்புசாமி – தலைவர் பாண்டியர் பேரவை இயக்கம், குரு. ஜெயச்சந்திரன் கம்மாளர் ஒருங்கிணைப்பு பேரவை, செல்லப்பாண்டியர் அமைப்பாளர் தமிழர் நடுவம், துரை ராஜகுமாரன் தமிழ் தேசிய ஆர்வலர் ஆகியோர் முக்கிய உரைகளை ஆற்ற இருக்கிறார்கள். நிறைவாக வரகுண பாண்டியன் நன்றியுரை கூற இருக்கிறார். சுமார் 200க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.

தமிழக அரசியல் வரலாற்றில் சூறாவளி போல உள் நுழைந்த அபார சிந்தனையாளர் செல்வா பாண்டியர் என்பது மறுக்க முடியாத உண்மை. அவருடைய அதிரடி பிரவேசம் மரபுரீதியாக ஆளவந்தார்களாக இருந்த திராவிட ஆட்சிக் குடும்பங்களுக்கு பெரும் கெடிக்கலக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் திருச்சி பெரம்பலூரில் இடம் பெற்ற சாலை விபத்தினால் செல்வா பாண்டியரின் திடீரென மறைந்தது தமிழினத்திற்கே பேரிழப்பாகியது. தமிழகத்தை தமிழரே ஆள வேண்டும் என்ற செல்வாவின் கருத்துக்கள் இதுவரை யாரும் முன்வைத்திராத அபாரமான கருத்துக்களாகும். இன்று பல தலைவர்கள் பாவிக்கும் கருத்துக்களும், கைதட்டல்கள் வேண்டும் கருத்துக்களும் உண்மையில் செல்வா பாண்டியரிடமிருந்து சுடப்பட்ட கருத்துக்கள்தான்.

இப்போது செல்வா பாண்டியரின் மறைவு கற்பனை வளமற்ற பல தமிழ் தலைவர்களுக்கு தொடர்ந்து அரசியல் செய்ய முடியாத வெற்றிடத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி சோகங்கள் பல.

ஆனால் செல்வாவின் மறைவு தமிழகத்தை தமிழர் அல்லாதவர்கள் ஆட்சி செய்யும் காலத்தை மேலும் சில தசாப்தங்கள் நீடித்துவிட்டது பெரும் சோகமாகவே இருக்கிறது.

வரலாறு ஒரு பொழுதும் தவறிழைப்பதில்லை. செல்வாவின் வரவு போல அவரது மரணமும் ஏதோ ஒரு காரணத்தின் வயப்பட்டதே என்று நம்பப்படுகிறது. இருள் மிகுந்த காட்டு வழியாக மக்களை அழைத்துச் சென்ற ஒரு தலைவன் நடுக்காட்டில் வழி தெரியாது நின்ற மக்களுக்கு தன் உயிர் கொடுத்து ஒளி பாய்ச்சி காட்டை கடக்க வழி காட்டி மறைந்தது போன்ற ஒரு கதைதான் அவருடைய வாழ்வும் மரணமுமாகும். ஒரு குறுங்காலத்தில் அவர் பேசிய மேடைப் பேச்சுக்கள் அனைத்துமே நம்ப முடியாத பொக்கிஷங்களாகும். மேலும் ஒரு நூற்றாண்டுக்கு போதும் என்று கூறப்படுமளவுக்கு பெறுமதி நிறைந்த கருத்தியல் பொக்கிஷங்களாக இருக்கின்றன.

தனக்கு வழங்கப்பட்ட காலத்தை கண்டு கொண்டவர் போல, கிடைத்த பொழுதை நன்கு பயன்படுத்தி, பெரிய பெரிய விடயங்களை எல்லாம் சொல்லி விடைபெற்ற செல்வா பாண்டியரை போற்றும் இந்த நிகழ்வு அவருடைய ஆளுமையையும், தமிழின அறிவியல் வரலாற்று விடுதலையையும் முன்நகர்த்தித் தள்ளும் என்பதில் இரு கருத்துக்களுக்கு இடமில்லை.

வாழ்க செல்வா பாண்டியர் புகழ்.

அலைகள் 02.11.2018

Related posts