இன்றும் நாளையும் இந்திய சினிமாவில் முக்கியமான நாள்

இன்றும் நாளையும் (நவம்பர் 2 & 3) இந்திய சினிமாவில் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது.

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக இந்தியா சினிமாவும் வளர்ந்து வருகிறது. ‘பாகுபலி 2’, ‘தங்கல்’ போன்ற படங்கள் உலக அளவில் கவனம் பெற்றுள்ளன. இந்திய சினிமாக்களுக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் வெளிநாடுகளில் நடைபெறுவதைப் போல, பல வெளிநாட்டுப் படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் இந்தியாவில் நடைபெறுகின்றன.

இந்நிலையில், இன்றும் நாளையும் (நவம்பர் 2 & 3) இந்திய சினிமாவில் முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. காரணம், தொழில்நுட்பத்தின் உச்சத்துடன் ஏராளமான கிராபிக்ஸ் பணிகளுடன் தயாராகிவரும் இரண்டு படங்களின் ட்ரெய்லர்கள் இன்றும் நாளையும் ரிலீஸாக இருக்கின்றன.

ஒன்று, ஷாருக் கானின் பாலிவுட் படமான ‘ஜீரோ’. இன்னொன்று, ரஜினியின் தமிழ்ப் படமான ‘2.0’.

ஷாருக் கான் ஹீரோவாக நடித்துள்ள ‘ஜீரோ’ படத்தை, ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ளார். இதில், குள்ள மனிதராக நடித்துள்ளார் ஷாருக் கான். கத்ரினா கைஃப், அனுஷ்கா சர்மா, அபி தியோல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க, சல்மான் கான், கஜோல், தீபிகா படுகோனே, ராணி முகர்ஜி, மறைந்த ஸ்ரீதேவி, அலியா பட், கரிஷ்மா கபூர், ஜுஹி சாவ்லா, மாதவன் ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்.

200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஷாருக் கானின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்தின் ட்ரெய்லர் இன்று ரிலீஸாக இருக்கிறது. டிசம்பர் மாதம் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

அதேபோல், ரஜினி நடித்துள்ள ‘2.0’ படத்திலும் நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக நடைபெற்று வந்த கிராபிக்ஸ் பணிகளுக்காக மட்டும் கிட்டத்தட்ட 543 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே இதுவரைக்கும் எந்தப் படத்துக்கும் இந்த அளவு செலவிடப்படவில்லை. உலக அரங்கில் இந்திய சினிமாவை எடுத்துச் சென்ற ‘பாகுபலி’யைவிட இரண்டு மடங்குக்கும் அதிகமாக கிராபிக்ஸ் பணிகளுக்காக செலவிட்டிருக்கிறார்கள். 3 ஆயிரம் பேர் இந்த கிராபிக்ஸ் பணிகளைச் செய்திருப்பதாகவும் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘2.0’. ஏமி ஜாக்சன் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், அக்‌ஷய் குமார் வில்லனாக நடித்துள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாகியுள்ளது.

எனவே, இந்த இரண்டு படங்களும் உலக அளவில் கவனம் பெறுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

Related posts