பாக்யராஜின் ராஜினாமாவை ஏற்க முடியாது

சர்கார் சர்ச்சை’யில் ராஜினாமா செய்த பாக்யராஜின் முடிவை ஏற்க மறுத்து அவரே தலைவராகத் தொடர்வார் என திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் ‘சர்கார்’ திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. அந்தப் படத்தின் கதையை ஏ.ஆர்.முருகதாஸ் திருடிவிட்டார் என்று இணை இயக்குநர் வருண் ராஜேந்திரன் என்பவர் புகார் தெரிவித்தார்.

தனது செங்கோல் கதையின் மூலக்கருவை எடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் பயன்படுத்தியுள்ளதாக வருண் ராஜேந்திரன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த விவகாரகத்தில் படக்குழுவினர் மறுத்த நிலையில் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கு இந்தப் பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது.

சங்கத்தின் தலைவர் என்கிற முறையில் கே.பாக்யராஜ் இதை விசாரித்தார். ‘சர்கார்’ பிரச்சினை உயர் நீதிமன்றத்தில் வழக்காக மாறியது. இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாக பாக்யராஜின் வாக்குமூலம் இருந்தது. ஏ.ஆர்.முருகதாஸின் ’சர்கார்’ கதையும், செங்கோல் கதையும் ஒன்று என்று வாக்குமூலம் கொடுத்தார்.

இதற்கிடையே முருகதாஸை சமாதானப்படுத்தி வருண் ராஜேந்திரனுக்கு நியாயம் கிடைக்கச்செய்து நீதிமன்ற வழக்கை சுமூகமாக முடித்துவைத்தார். இந்தப் பிரச்சினையில் ‘சர்கார்’ கதையின் கருவை வெளியே சொன்னதாகவும், வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக இருந்ததாகவும் பாக்யராஜ் மீது படக்குழுவினருக்கு மனவருத்தம் இருந்தது.

மறுபுறம் விஜய் ரசிகர்கள் பாக்யராஜையும், அவர் மகன் சாந்தனுவையும் ஃபேஸ்புக், ட்விட்டரில் வறுத்தெடுத்தனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாக்யராஜ் இதை வெளிப்படையாகவே தனது பேட்டியில் தெரிவித்து தனது மகனே விஜய் ரசிகர் அவரது எதிர்ப்புக்கும் ஆளானேன் என்று கூறினார்.

இந்நிலையில் இன்று திடீரென பாக்யராஜ் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து விலகினார். தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து ஒரு அறிக்கையையும் அவர் வெளியிட்டார்.

ஏ.ஆர்.முருகதாஸிடம் கெஞ்சியும் அவர் ஒத்துவராததால் கதையின் கருவைக்கூற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது, அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன், ஆனாலும் ஒரு துணை இயக்குநருக்காக நியாயம் செய்தேன் என்பதில் பெருமிதமாக உள்ளது என்று பேட்டி அளித்த அவர் ராஜினாமா செய்தார்.

ஆனால் அவர் ராஜினாமா செய்த சில மணி நேரத்தில் தென் இந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் அவரது ராஜினாமாவை ஏற்கமறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச்செயலாளர் மனோஜ்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பாக்யராஜின் ராஜினாமாவை ஏற்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.

ராஜினாமா முடிவை மாற்றிக்கொள்ளவேண்டும் என்றும், திரைப்பட எழுத்தாளர் சங்க அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கூடி பாக்யராஜின் ராஜினாமாவை ஏற்கவில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், பாக்யராஜே தங்கள் சங்கத்தலைவராக தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts