நியமிக்கப்பட்ட பிரதமர் சட்டபூர்வமற்றவர் – ஹக்கீம்

சட்டத்தை மீறிச் செய்யப்பட்ட பிரதமர் நியமனத்தை சட்டபூர்வமானதாக மாற்றுவதற்கு பாராளுமன்ற அமர்வுகளைக் கூட்டாமல் காலம் தாமதிப்பதன் மூலம் இன்றும் சட்டபூர்வமற்ற ஒரு பிரதமராகத் தான் நியமிக்கப்பட்ட பிரதமர் இருந்து கொண்டிருக்கின்றார் என்பது தான் யதார்த்தம் என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று காலை அனைத்தக் கட்சித் தலைவர்களும் இணைந்து சபாநாயகரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அனைத்து கட்சித் தலைவர்களும் ஒருமித்த கூரலில் பாராளுமன்றத்தை காலந்தாழ்த்தாது உடனடியாக கூட்டுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

குறித்த கலந்துரையாடல் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார்.

அவர் சர்வதேச ஊடகத்திற்கு தெரிவித்த கருத்து வருமாறு,

இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள அராஜக நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு நாட்டில் சட்டத்தின் ஆட்சியை, நீதி நியாயத்தின் அடிப்படையிலேயே நிலைநிறுத்துவதற்கு சபாநாயகர் எங்களுடைய உரிமைகளை பாதுகாக்கின்ற நபரென்ற அடிப்படையில் உடனடியாக பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று நாங்கள் எல்லோரும் வலியுறுத்திக் கேட்டுள்ளோம்.

இவ்வாறானதொரு அரசியலமைப்பு நெருக்கடிக்கு எங்களது ஜனாதிபதி, எமது பெறுமதியான வாக்குகளின் மூலம் அரசியல் ஆணையைப் பெற்று வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறிச் செயற்பட்டுள்ளார் என்றதொரு குற்றச்சாட்டை மாத்திரமே நாங்கள் எல்லோரும் முன்வைத்துள்ளோம்.

எனவே நடைபெற்ற இந்த நடவடிக்கையை நாங்கள் மிகவும் கண்டிக்கின்றோம். பாராளுமன்றத்தில் பிரதமருடைய பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு இருக்கின்ற வாய்ப்பை இல்லாமல் செய்கின்ற அடிப்படையிலேயே பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்காக அதிகாரத்தை பயன்படுத்தி வேண்டுமென்றே பாராளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்தி வைத்திருப்பதன் மூலம் ஜனாதிபதி செய்துள்ள செயல் மிக மோசமான ஜனநாயக மீறல் என்று நாங்கள் கண்டிக்கின்றோம்.

எனவே எமது உரிமைகளை பாதுகாக்கின்ற எமது சபையின் தலைவர் என்ற அடிப்படையிலே இந்த நாட்டின் சபாநாயகர் கரு ஜயசூரியவிடத்திலே பாரிய தார்மீகப் பொறுப்பு மாத்திரமல்ல, நீதியின் கடமையும் உள்ளதென்பதை நாங்கள் அவருக்கு வலியுறுத்தியுள்ளோம்.

அதனைச் செய்வதன் மூலம் இன்று நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற இந்த அராஜக நிலைமையை மிக விரைவிலே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும் சட்டத்தின் நிலைநாட்டுவதற்குரிய ஏற்பாட்டுக்கு அவர் வழிகோல வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

மக்களை தலைநகர் கொழும்புக்கு அழைத்துவந்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி தமது தரப்பு நியாயங்களை வெறும் தலைகளைக் காட்டவதன் மூலம் செய்ய முயலுகின்ற கட்சிகள் மற்றும் தலைமைகள் பாராளுமன்ற சபாபீடத்திற்குள்ளே தலைகளை எண்ணுவதற்கான வாய்ப்பை ஏன் இல்லாமல் செய்துள்ளனர்.

இவ்வாறான செயற்பாட்டை நாங்கள் மிகத் தீவிரமாக கண்டிக்கின்றோம். எனவே இந்த நிலையில் இருந்து நாட்டின் ஜனநாயகத்தை மீட்டுத் தருகின்ற பொறுப்பு சபாநாயகருக்குள்ளது என்பதை நாங்கள் வலியுறுத்துகின்றோம்.

இதேவேளை, சபாநாயகர் எமது வலியுறுத்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசி, பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான ஒப்புதலை தந்திருந்தாலும் கூட, பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியிடப்படவில்லையென்று தான் அறிகின்றோம்.

இந்த நிலையில் தான் அதனை மிகவிரைவில் செய்வதற்குத் தவறினால் நாங்களா பாராளுமன்றத்தின் சபாபீடத்திற்குள் நுழைவதற்கும் தவறமாட்டோம் என்று நாங்கள் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளோம்.

என்னைப் பொருத்தவரை இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இந்த கேவலமான நிலைமை பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைகளுக்கு விலை பேசுகின்ற ஒரு மிக மோசமான கீழ்த்தரமான ஒரு கலாசாரத்தை உருவாக்கி வருகின்றது.

எனவே நாட்கள் செல்லச்செல்ல இந்த நிலைமை இன்னும் மோசமடையும் என்ற காரணத்தினால் நாங்கள் எல்லோரும் இந்த நாட்டிலே கௌரவமான நிம்மதியான அதேநேரம் நேர்மையான அரசியலைச்செய்ய விரும்புகின்றவர்கள் என்ற அடிப்படையிலே உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அத்துடன் எமது கௌரவத்தை பாதுகாத்துக்கொள்வதற்குக்கூட வேறுவழியில்லை.

தேவையான தலைகளை இன்றும் சேகரிக்க முடியவில்லை. இன்னும் கூடுதலான தலைகளுக்கு விலைபேசிக்கொண்டுள்ளனர். எனவே தான் காலத்தை தாமதித்துக்கொண்டு போகின்றனர். என்பது தான் இதன் யதார்த்தம். எங்களுடை தலைகளுக்கு மேல் விலை பேசுகின்ற இந்த கலாசாரத்திற்கு முடிவுகொண்டுவர வேண்டும். எங்களுடைய நேர்மையை எங்களுடைய அரசியல் உரிமையை பாதுகாத்துத் தர வேண்டும் என்று அவரிடம் கேட்டுள்ளோம்.

முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டில் நாங்கள் மாற்றங்களைக் கொண்டுவரவில்லை. அதற்கான சூழ்நிலையும் உருவாகவில்லை. சட்டபூர்வமான ஒரு பிரதமரை உருவாக்குகின்ற உரிமை பாராளுமன்ற அமர்வுகளில் மாத்திரம் தான் உள்ளது.

சட்டத்தை மீறிச் செய்யப்பட்ட இந்த நடவடிக்கையை அவர்கள் சட்டபூர்வமானதாக மாற்றுவதற்கு பாராளுமன்ற அமர்வுகளைக் கூட்டாமல் காலம் தாமதிப்பதன் மூலம் இன்றும் சட்டபூர்வமற்ற ஒரு பிரதமராகத் தான் நியமிக்கப்பட்ட பிரதமர் இருந்து கொண்டிருக்கின்றார் என்பது தான் யதார்த்தம். எனவே இதை மாற்ற வேண்டும்.

இதை மாற்றுவதற்கு பாராளுமன்ற அமர்வுகளைக் கூட்ட வேண்டும். ஐக்கிய தேசியக்கட்சிக்கு நாம் ஆதரவு வழங்குவதில் எந்தமாற்றமுமில்லை. எனக்கு நம்பிக்கையுள்ளது எங்களுடைய உறுப்பினர்கள் எவரும் விலைபோக மாட்டார்கள் என்று. அவர்கள் அனைவரும் தலைவருடன் இருந்து தான் இதற்கு தீர்வுகாண வேண்டுமென உள்ளனர். அனைவரும் ஒருமித்த கருத்தோடு இந்த விசயங்களை மிகத் தீவிரமாக கண்காணித்துக்கொண்டு வருகின்றோம். இதில் நீதியும் நியாயமும் நிலைக்கும் என்பதில் நாம் நம்பிக்யுடன் உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts