அலைகள் வாராந்தப் பழமொழிகள் 02.11.2018 வெள்ளி

01. பொது நலன் கருதி காரியங்கள் செய்யும் ஒருவர் புகழையோ பரிசையோ எதிர்பார்ப்பது கிடையாது. ஆனால் அவை இரண்டும், இறுதியில் அவரை வந்து சேர்ந்துவிடும்.

02. நாம் பிறருக்கு வேண்டியதை செய்தால்தான் நமக்கு வேண்டியது கிடைக்கும். உங்களுக்கு உதவி வேண்டுமா தவறாது மற்றவர்களுக்கு உதவுங்கள்.

03. யாருக்கும் அநீதி இழைக்காதீர்கள் நல்லது திரும்பி வருவதைப் போலவே கெட்டதும் திரும்பி வரும்.

04. யாராவது உங்களுக்கு தீங்கு செய்தாலும் அமைதியுடன் இருங்கள். தீமைக்குப் பிறகு நன்மை வந்து சேரும்.

05. சந்தேகத்திற்கு இடமின்றி ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் நீங்களே தண்டனை அனுபவித்துக் கொள்கிறீர்கள். மாறாக நீங்கள் செய்யும் ஆக்கபூர்வமான செயலுக்காக பரிசும் கிடைக்கிறது.

06. சில வேளை மற்றவருக்கு உதவி செய்தும் பலன் இல்லையே என்று கருத வேண்டாம். நீங்கள் செய்யும் உதவிகள் நேர்மறையாக உங்களுக்குள் வேலை செய்து உங்களுக்குள்ளேயே பெரும் பலன் தரும்.

07. நீங்கள் ஓர் உயிருள்ள காந்தம் உங்களுக்கு ஏற்றவரை கவர்ந்து இழுக்கிறீர்கள். உங்களுடன் இணைந்து போகாதவர்களை ஒதுக்கிவிடுவீர்கள்.

08. அந்தக் காந்தத்தை உருவாக்குவதும் நீங்கள்தான். நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ அப்படியே அந்தக் காந்தத்தை உங்களால் உருவாக்க முடியும்.

09. ஒருவருக்கு சேவையை அளிப்பதன் மூலம் பயன் பெறாமல் போகமாட்டீர்கள். அதுபோல ஒருவருக்கு செய்த தீமைக்கு தண்டனை பெறாமலும் இருக்க முடியாது.

10. நீங்கள் உங்கள் எதிரிகளிடம் ஒத்துழைப்பு மனபாவத்துடன் நடந்தால் அவர்களும் அவ்வாறே நடப்பார்கள். மற்றவர்களிடம் பகையும் வெறுப்பும் காட்டினால் பழி வாங்கும் போக்கு வலுத்துவிடும்.

11. மற்றவர்கள் உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களோ அதே உதவியை அவர்களுக்கு முதலில் நீங்களே செய்யுங்கள்.

12. உதவிக்கு பலன் கிடைக்காவிட்டாலும் உண்மையாகவே உதவி செய்யும் பழக்கம் என்பது ஒருவருக்கு வருமானால் அதுவே போதும் காரணம் அது அவருக்கு பெரிய நன்கொடையாக மாறிவிடும்.

13. உங்கள் புகழ் உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்று தெரியாது. காரணம் அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. மற்றவர்கள் உங்களைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் உங்கள் புகழைத் தீர்மானிக்கிறது.

14. யாருமே உங்கள் குணாதிசயத்தை அழிக்கவோ மாற்றவோ முடியாது. அதை அழிவு சக்தியாகவோ அல்லது ஆக்க சக்தியாகவோ மாற்றும் சாவிக்கொத்து உங்களிடமே இருக்கிறது.

15. நல்ல காலம் என்பது உங்களை நோக்கி ஒருபோதும் வருவதில்லை. நீங்கள்தான் உங்களுக்கான நல்ல காலத்தை அளிக்க முடியும், வேறு யாரும் எதுவும் அதை வழங்க இயலாது.

16. மிகவும் மலிவான விலையில் ஆடை வேண்டும் என்று கேட்கும் மனிதனைக்கண்டு நான் பரிதாபப்படுகிறேன். உண்மையில் அவ்வாறான ஓர் ஆடையை தைக்கும் ஒரு மனிதன் வறுமையில்தான் வாட வேண்டும்.

17. மனித வரலாறு என்பது உழைப்பின் வரலாறாகும். மக்களின் நாயகர்கள் எல்லோரும் உழைப்பின் நாயகர்களே.

18. மிருகங்கள் பணம் சேர்த்து வைப்பதில்லை. எதிர்காலம் என்ற விஷயம் பற்றி அவை கவலை கொள்வதும் இல்லை. செல்வத்தை மட்டும் வைத்துக் கொண்டு வாழ்ந்திட முடியாது என்பதை மிருகங்களையும் பறவைகளையும் வைத்தே புரிந்து கொள்ளுங்கள்.

19. முதலாளி என்பவரே தொழிலாளரின் கை வண்ணத்தில் உருவானவர்தான். தொழிலாளரின் செயற்பாடுகளே முதலாளியை செதுக்குகிறது. உரிமைக்கு போராடுவதைவிட உரிமைகளை வழங்கும் முதலாளியை உருவாக்குவதே மேலானது.

20. பணம் என்பது உழைப்பின் நண்பன். அது பொருளாதார செயற்பாடுகளுக்கு அவசியமாக இருந்து, ஈற்றில் பரிசாக மாறுகிறது. சில சமயங்களில் அது மோசமான எதிரியாகவும் மாறிவிடுகிறது.

21. முதலாளி என்பவன் தொழிலாளருக்கு விரோதமாக நேரடியாவோ அல்லது மறைமுகமாகவோ பணத்தை பயன்படுத்தக்கூடாது. பணத்தின் நோக்கம் அதுவல்ல.

22. தீங்கு செய்தால் தவறாது வருந்த நேரிடும் என்று நாம் அஞ்சி நடக்க வேண்டும். மாறாக சந்தோஷம் ஏற்படும்போது அடங்கி நடக்க வேண்டும்.

23. தொழிலாளிகள் எதெற்கெடுத்தாலும் அதிருப்தியடையக் கூடாது. இன்றைய தொழிலாளி அனுபவிக்கும் வசதியை நூறு வருடங்களுக்கு முன்பாக ஓர் இளவரசானால்கூட நினைத்துப் பார்க்க முடியாது என்பதை புரிந்து பொறுப்புடன் நடக்க வேண்டும்.

24. பணத்தை விடவும் உழைப்பு முக்கியமானது. உழைப்பு தரும் கனிதான் பணம்.

25. நாம் அனைவரும் சமூகம் என்ற பொதுவான முடிச்சால் பிணைக்கப்பட்டுள்ளோம். சமுதாயத்தில் ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் என்று அனைவரும் இடம் பெறுகிறோம். எனவேதான் ஒருவருக்கு தீமை செய்தால் அது அனைவரையும் பாதிக்கிறது. நன்மை செய்தாலும் அப்படியே.

அலைகள் பழமொழிகள் 02.11.2018
தொடர்ந்தும் வரும்..

Related posts