‘சர்கார்’ படத்துக்கு தடை விதி : உண்ணாவிரதம்

முருகதாஸ் இயக்கியுள்ள ‘சர்கார்’ படத்திற்கு தடைகேட்டு குறும்பட இயக்குநர் அன்பு ராஜசேகர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

அன்பு ராஜசேகர் தஞ்சை விவசாயிகளின் நிலை குறித்த ‘தாகபூமி’ என்ற குறும்படத்தை கடந்த 2013-ம் ஆண்டு இயக்கியதாகவும், அதனை முறையாக பதிவும் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உண்ணாவிரதம் குறித்து அன்பு ராஜசேகர் கூறுகையில், ”ட்விட்டர் கணக்கில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், உதவி இயக்குநர் தேவைப்படுவதாக தெரிவித்தார். இதையடுத்து எனது ‘தாகபூமி’ குறும்படத்தை அவருக்கு அனுப்பினேன். அதைப் பயன்படுத்திக்கொண்ட முருகதாஸ் அதை திரைப்படமாக எடுத்துவிட்டு என்னை ஒதுக்கிவிட்டார்.

எனது கதையைப் பயன்படுத்தியது குறித்து ஏ.ஆர். முருகதாஸுக்கு எதிராக தஞ்சை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். கடந்த 4 ஆண்டுகளாக போராட்டங்களை நடத்தி வருகிறேன்.

இது குறித்து காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன். எனது கதையைப் பயன்படுத்தி ‘கத்தி’ படத்தின் கதையை உருவாக்கியதாக புகார் அளித்து நடவடிக்கை வேண்டும்.

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று விஷாலைச் சந்தித்து இதுவரை எனக்கு நியாயம் கிடைக்காததால் முருகதாஸ் இயக்கி வெளிவரவுள்ள ‘சர்கார்’ படத்தை வெளியிட ரெட்கார்டு போடவேண்டும் என புகார் அளித்தேன்.

எனக்கு நியாயம் கிடைக்கும்வரை ‘சர்கார்’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று அன்பு ராஜசேகர் தெரிவித்தார்.

முன்னதாக, முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படம் செங்கோல் என்ற படத்தின் கதையைப் பயன்படுத்தியதாக வருண் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கில், இழப்பீடு மற்றும் டைட்டிலில் வருணின் பெயர் போடுவதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒப்புக்கொண்டதன் பேரில் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Related posts