சர்க்கார் திருட்டுக் கதைதான் நஷ்டஈடு கொடுக்க முருகதாஸ் சம்மதம்

சர்கார்’ படம் வெளியாவதில் நீடித்த சிக்கல் முடிவுக்கு வந்தது. வருண் ராஜேந்திரன் நிபந்தனைகளை ஏற்று சமரசம் ஆனதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ள நிலையில் ‘சர்கார்’ பட வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

‘சர்கார்’ படத்தின் கதை தனது ‘செங்கோல்’ கதை என கதாசிரியர் வருண் ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனக்கு ரூ.30 லட்சம் தொகை வழங்க வேண்டும், படத்தின் டைட்டிலில் தனது பெயரைப் போடவேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர் வைத்திருந்தார்.

முருகதாஸ் தரப்பும், தயாரிப்பு தரப்பும் இது குறித்து அக்டோபர் 30-க்குள் பதிலளிக்க அனுமதி கேட்டனர். இதுகுறித்து பதிலளிக்க தென்னிந்திய கதை ஆசிரியர்கள் சங்கம், தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் முருகதாஸ் ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கை அக்.30-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

வழக்கு முடியும் வரை படத்தை வெளியிடத் தடை கேட்டபோது, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதி எம்.சுந்தர் மறுத்து வழக்கை அக்.30-க்கு ஒத்தி வைத்திருந்தார்.

இந்நிலையில் முருகதாஸ் தனது சொந்தக்கதை எனக் கூற, இந்த விவாதத்தின் இடையே கதாசிரியர் சங்கத் தலைவர் பாக்யராஜும் இரண்டு கதைகளும் ஒன்று எனத் தெரிவித்திருந்தார். இதனால் பரபரப்பு கூடியது. இந்நிலையில் திட்டமிட்டபடி படம் வெளியாகுமா என சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் நீதிபதி சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், கதாசிரியர் சங்கத்தலைவர் பாக்யராஜ், தயாரிப்பு நிறுவன தரப்பினர் ஆஜராகினர்.

‘சர்கார்’ மற்றும் செங்கோல் இரண்டும் ஒரே கதை என கதாசிரியர் சங்கத் தலைவர் பாக்யராஜ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கதாசிரியர் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதாக இயக்குநர் முருகதாஸ் தரப்பில் தெரிவித்தனர். ஆனால் வழக்கு தொடுத்த வருண் ராஜேந்திரன் தரப்பில் யாரும் ஆஜராகி விளக்கம் அளிக்காததால் வழக்கை நீதிபதி சில மணி நேரத்திற்கு ஒத்தி வைத்தார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் விசாரணை தொடங்கியது. அப்போது வருண் ராஜேந்திரன் தரப்பினரும் ஆஜராகினர். அப்போது ஏ.ஆர். முருகதாஸ் தரப்பில் வருண் ராஜேந்திரனுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வழங்குவதாகவும், பட டைட்டில் கார்டில் வருண் ராஜேந்திரன் பெயரைப் போட்டு நன்றி எனப் போடுவதாகவும் ஒப்புக்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தனர்.

இரு தரப்பும் சமாதானமாகச் செல்ல ஒப்புக்கொண்டதால் வழக்கை நீதிபதி சுந்தர் முடித்து வைத்து உத்தரவிட்டார். இதனால் ‘சர்கார்’ பட ரிலீஸ் சிக்கலின்றி முடிந்துள்ளது.

Related posts