இலங்கை அரசியல் தற்போய நிலவரம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரி மாளிகையை விட்டு வெளியேறுமாறு கூறுவை ஏற்றுக் கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

மேலும் அரசியலமைப்புக்கேற்ப சட்டரீதியாக பிரதமராக தெரிவு செய்யப்பட்டவர் ரணில் விக்ரமசிங்க ஆவார். எனினும் தற்போது அரசியலமைப்புக்கு முரணான வகையில் அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தின் பெரும்பான்மை பலம் அவருக்குள்ளது. அதனை எம்மால் இன்று நிரூபிக்க முடியும். அதற்கு பயந்துதான் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் சாகல ரத்னாயக்க சுட்டிக்காட்டினார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

—————

பாரளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கோரி தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா .சம்பந்தன் பாராளுமன்ற சபாநாயகர் கருஜெயசூரியவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

பாராளுமன்றத்தின் ஆதிபத்யத்தை நிலைநிறுத்தவேண்டியதன் அவசியத்தை அங்கீகரிப்பதை கருத்தில்கொண்டும் மக்களால் ஜனநாயகரீதியில் தெரிவு செய்ய்ப்பட்ட பிரதிநிதிகளை உள்ளடக்கியுள்ள பாராளுமன்றத்தில் ஆதிபத்யத்தை நிலைநிறுத்தவேண்டியதன் அவசியத்தை கருத்தில்கொண்டும்,பாராளுமன்றம் தனது சட்டபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதன் மூலம் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

——————

நாளை அரச விடுமுறையென வெளியான தகவல் வதந்தியென தெரிவிக்கப்பட்டுள்ளது.நாளைய தினம் அரச விடுமுறை என வெளியான செய்தியில் எவ்வித உண்மையுமில்லையெனவும் அது வதந்தியெனவும் தெரிவித்து அரசாங்க தகவல் திணைக்களம் அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

——————

தெமட்டகொடை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் பலியாகியுள்ளார்.தெமட்டகொடையிலுள்ள, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைமையகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் 34 வயதான நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். தெமட்டகொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

——————-

அரசாங்க ஊடகங்களுக்கு பதில் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்திற்கு (Rupavahini) சட்டத்தரணி சரத் கோன்கஹகே, சுயாதீன தொலைக்காட்சி சேவை (ITN) மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திற்கு (SLBC) பேராசிரியர் சோமரத்ன திஸாநாயக்க மற்றும் லேக் ஹவுஸ் (Lake House) நிறுவனத்திற்கு வசந்த ப்ரிய ராமநாயக்க ஆகியோர் பதில் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.

நிறுவனங்கள் – பதில் தலைவர்கள்
ரூபவாஹினி – சட்டத்தரணி சரத் கோன்கஹகே
ITN, SLBC – பேராசிரியர் சோமரத்ன திஸாநாயக்க
லேக்ஹவுஸ் – வசந்த ப்ரிய ராமநாயக்க

—————

புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ இன்று (28) ஸ்ரீ தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டார்.இந்நிகழ்வில் அவரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவும் கலந்துகொண்டிருந்தார்.
கண்டியிலுள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட அவர், கண்டியில் உள்ள அஸ்கிரிய, மல்வத்த ஆகிய முக்கிய விகாரைகளுக்குச் சென்றதோடு, அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். ஸ்ரீ தலதா மாளிகைக்கு வருகைதந்த பிரதமருக்கும் அவர் பாரியாருக்கும் அங்கு, செங்கம்பளம் விரித்து வரவேற்பு அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்

——————

Related posts