அமெரிக்க போரை சந்திக்க தயார் நிலையில் இருக்கிறோம்

அமெரிக்கா போர் தொடுத்தால் ரஷ்யாவும் போருக்கு தயார் நிலையில் உள்ளது என்று அந்த நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 1987-ல் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா இடையே அணு ஆயுத உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இதன்படி நிலத்தில் இருந்து ஏவப்படும் 500 முதல் 5,500 கி.மீ. தொலைவு பாயும் திறன் கொண்ட அணு ஏவுகணைகளை இருநாடுகளும் பயன்படுத்தக்கூடாது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளி யேறப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்மையில் அறிவித்தார்.

இந்தப் பின்னணியில் ரஷ்ய வெளியுறவுத் துறை துணை இயக்குநர் அண்ட்ரே பெலுசோவ், ஐ.நா. சபையில் நேற்று முன்தினம் பேசியதாவது:

ரஷ்யா போருக்கு தயாராகி வருவதாக அமெரிக்கா அண்மையில் குற்றம் சாட்டியது. அது உண்மைதான். அமெரிக்கா போர் தொடுத்தால் ரஷ்யாவும் போருக்குத் தயாராக உள்ளது.

அணுஆயுத வலிமையை அதிகரிக்கவே இருநாட்டு அணுஆயுத உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது. இதன்மூலம் உலகின் பாதுகாப்பை மிகவும் மோசமான நிலைக்கு அமெரிக்கா தள்ளியுள்ளது.

ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப் பிய நாடுகளில் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் ஒட்டுமொத்த ஐரோப்பாவின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Related posts