ஜனாதிபதியின் உரை வாசிக்க எளிதாக சுருக்கித் தரப்படுகிறது.

01. மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை உயிரைக் கொடுத்தேனும் நிறைவேற்றுவேன். 2015 ஆட்சியை பொறுப்பேற்றபோது என் மனைவி பிள்ளைகளின் உயிர்களுக்குக் கூட ஆபத்திருந்த நிலையிலேயே பொறுப்பேற்றேன்.

02. அந்த நேரம் ஒழுங்கற்ற முறையில் உள்ளே புகுந்த ரணில் விக்கிரமசிங்க மேலும் சிலரோடு சேர்ந்து நாட்டை களியாட்ட விடுதியாக்கினார்.

03. வெறும் 47 ஆசனங்களுடன் இருந்த ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கினேன். ஆனால் ரணில் நல்லாட்சியின் அத்தனை கோட்பாடுகளையும் நாசமாக்கினார்.

04. ரணில் கூட்டு செயற்பாடற்ற ஒரு முரட்டுக்காளை போல தன்னிச்சையாகவே நடந்தார்.

05. ஒரு சிறு குழுவை தன்னோடு வைத்துக்கொண்டு அவர் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்தமை எமக்கு பெரும் தர்மசங்கடங்களை ஏற்படுத்தியது.

06. கடந்த மூன்றரை வருடங்களாக எனக்கும் ரணிலுக்கும் இடையே அரசியல், கலாச்சாரம் போன்ற பல விடயங்களில் முரண்பாடு நிலவியது.

07. இத்தகைய ஒற்றுமையில்லாத செயல்களால் நான் பல பின்னடைவுகளை சந்தித்தேன். ஆயினும் அமைச்சரவை கூட்டங்களில் மிகுந்த பொறுமையை கடைப்பிடித்தேன்.

08. மத்திய வங்கியின் மகா கொள்ளை விவகாரத்தில் ரணில் எப்படி நடந்தார் என்பதை அறிவீர்கள். நான் தலையிடப் போவதாகக் கூறியதும் அவர் பதட்டமடைந்தார்.

09. நான் ரணிலுடன் முரண்பட்டு மத்திய வங்கி சென்றபோது அங்கு மத்திய வங்கி நிதி மோசடி காரணமாக விடுமுறையில் நின்ற மத்திய வங்கி ஆளுநர் அர்ஜீன் மகேந்திரன் என்னை வரவேற்றது ஆச்சரியம் தந்தது. இவர் ரணிலின் நெருங்கிய நண்பராகும்.

10. இதற்காக ஓர் ஆணைக்குழுவை அமைத்த போது ஐ.தே.க என்னை எதிர்த்தது. ஆனால் அந்த மோசடியே நாட்டை இன்று அதலபாதாளத்தில் தள்ளியுள்ளது.

11. உள்ளுராட்சி தேர்தலில் நாம் பின்வாங்கியபோது ரணியை அழைத்து பேசினேன். பல சந்தர்ப்பங்களில் அவர் ஜனாதிபதியின் அதிகாரத்தை எடுத்து செயற்பட்டும் நான் பொறுமை காத்ததை தெரிவித்தேன்.

12. கடந்த சில தினங்களாக ஊடகங்களில் தோன்றிய நாமல் குமார எனும் நபர் என்னையும் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களையும் கொலை செய்யவிருக்கும் சதித்திட்டம் பற்றிய தகவல்களை வெளியிட்டார்.

13. இந்த அரசியல் நெருக்கடி பொருளாதார நெருக்கடி ஆகியவற்றிற்கு பின்னால் என்னைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் பற்றிய மிக முக்கியமான தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில் என் முன் எஞ்சியிருந்த ஒரே தீர்வு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களை அழைத்து அவரை பிரதமர் பதவியில் அமர்த்தி புதிய அரசாங்கத்தை அமைப்பது மாத்திரமே ஆகும்.

14. அர்ஜுன் மகேந்திரன் அவர்களை இந்த நாட்டுக்கு அழைத்துவந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பொறுப்பை கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.அதற்குக் காரணம் இந்த நாட்டில் யாவரும் அறிந்தவாறு அர்ஜுன் மகேந்திரன் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் மிகவும் நெங்கிய நண்பன் என்பதனாலேயே ஆகும்.

15. இப்போது இருக்கின்ற சட்டதிட்டங்களுக்கு அமைய மத்திய வங்கி கொள்ளையின் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டுமாயின் அதற்கு குறைந்தபட்சம் 15 வருடங்களுக்கு மேல் செல்லும் என தெரிவித்திருக்கின்றார்கள். அவர்கள் கொள்ளையடித்த பணத்தை மீளப் பெறுவதற்கும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கும் 15 வருடங்களுக்கு முன் இயலாத காரியம் என்பதை சட்ட நிபுணர்கள் எனக்கு விளக்கமளித்திருக்கின்றார்கள்.

16. இன்றைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே ஜனாதிபதி அலுவலகம் ஊடாக பாராளுமன்றத்திற்கு அதனை அனுப்பி வைத்தோம். ஐந்து மாதங்கள் கடந்தும் அவை இன்னும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. அந்த ஆவணம் சபாநாயகர் அலுவலகத்தின் பெட்டிகளுக்குள் சென்றுவிட்டன.

17. அவ்வாறு பின்போடப்பட்டது ஏன்? எவரின் தேவைக்காக? எவரின் தலையீட்டினால்? இதனால் பொதுமக்களுக்கு சொந்தமான இந்த பெருந்தொகைப் பணம் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் கிடைக்காது போகின்றது. குற்றாவளிகளுக்கு தண்டனை வழங்க 15 முதல் 20 வருடங்கள் வரை செல்லும். இந்த சீர்திருத்தம் திகதி குறிப்பிடப்படாது பின் போடப்பட்டதன் நோக்கம் இதுவே.

18. கடந்த வாரம் முன்வைக்கப்பட்ட காணிகள் பற்றிய இந்த விசேட சட்ட ஏற்பாடுகளைக் கொண்ட சட்டம் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டு பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறுமாயின் நமது இந்த தாய் நாட்டின் அனைத்து நிலங்களையும் எந்தவொரு தங்குதடைகளுமின்றி வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு சொந்தமாகவே பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

19. அதேபோன்று இங்கு இன்னொரு விடயத்தையும் நான் குறிப்பிட வேண்டும். ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் உருவாக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பொருளாதார முகாமைத்துவ சபை பாரிய ஊழல்களைக் கொண்டதாகும். அதனை இரத்துச் செய்வது பெரும் சவாலாகவே இருந்தது.இருப்பினும் கடும் முயற்சியின் பின்னர் அதை நான் இரத்துச் செய்தேன்.

20. தேசிய பொருளாதார சபையினை பலவீனப்படுத்துவதற்கும் அதன் செயற்பாடுகளை தடுப்பதற்கும் தன்னாலான அனைத்தையும்அவர் செய்து வந்தார். ரணில் விக்கிரமசிங்க அவர்களின் முரட்டுத்தனமான தீர்மானங்களே இந்த அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணமாக அமைந்தது என்பதை நான் தெளிவாகக் கூறவேண்டும். இதனால் இவ்வாறான அனைத்து செயற்பாடுகளுக்கும் எனக்கிருந்த ஒரே மாற்றுவழி கௌரவ மகிந்த ராஜபக்ஷ அவர்களை புதிய பிரதமராக நியமித்து புதிய அரசை அமைப்பது மாத்திரமே ஆகும்.

21. எனது நாட்டுக்காகவும் எனது அன்புக்குரிய மக்களுக்காகவும் நான் மேற்கொண்ட இந்த அரசியல் தீர்மானத்தினால் பொருளாதார நெருக்கடியை தீர்த்து அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைத்து சுபீட்சமான பொருளாதாரத்துடன் நல்லதோர் சமூகத்தைக் கட்டியெழுப்ப உயரிய ஆன்மீக சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படுவோம் எனக்கூறிக் கொள்வதுடன் அதற்காக ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் அனைத்து அரச ஊழியர்களையும்சகல அரசியல்வாதிகளையும் மதிப்புக்குரிய மகா சங்கத்தினரையும் ஏனைய மதத் தலைவர்களையும் மிகுந்த கௌரவத்துடன் அழைப்பதுடன் இப்பணிகளை இனிதே நிறைவேற்ற உங்களது உத்துழைப்பையும் ஆசீர்வாதத்தையும் நல்குமாறு மிகுந்த கௌரவத்துடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி.
வணக்கம்.

Related posts