திராவிடத்தை காப்போம் வை. கோபாலசாமி ஆவேசம்

மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளைத் தூக்கி எறியவும், திராவிட இயக்கத்திற்கு விடப்படும் அறைகூவல்களை எதிர்த்து முறியடிக்கவும், திமுகவின் தலைமையில் செயலாற்றுவோம் என, மதிமுக தீர்மானம் இயற்றியுள்ளது.

மதிமுக உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம், இன்று (வெள்ளிக்கிழமை) காலை, தாயகத்தில், கழக அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் 1 :

மதிமுக- மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளைத் தூக்கி எறியவும், திராவிட இயக்கத்திற்கு விடப்படும் அறைகூவல்களை எதிர்த்து முறியடிக்கவும், திமுகவின் தலைமையிலான அணியில் தோழமைக் கட்சியாக இணைந்து செயலாற்றி வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டு செவ்வனே நிறைவேற்றும் வகையில், மதிமுக மாவட்டக் கழகக் கூட்டங்களை நவம்பர் 5 ஆம் தேதிக்குள் நடத்தி, நவம்பர் 25 ஆம் தேதிக்குள் ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடிப் பணிக் குழுக்களை அமைக்க வேண்டும் என்றும், நவம்பர் 30 ஆம் தேதிக்குள் வாக்குச்சாவடிப் பணிக்குழுக்களின் பட்டியலைத் தலைமைக் கழகத்திற்கு அனுப்பிட வேண்டும்.

தீர்மானம் 2 :

தமிழக வரலாற்றில் முதல்வர் பதவியில் இருக்கும்போதே, ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணையை எதிர்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பொறுப்பில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். எனவே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகி, மத்திய புலனாய்வுத்துறை விசாரணையைச் சந்திக்க வேண்டும்.

தீர்மானம் 3 :

தமிழக அரசு டெங்கு, பன்றிக் காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வகங்கள், சிறப்புப் பிரிவுகள் தொடங்கி சிகிச்சை அளிக்க தக்கப் பணிகளை விரைந்து செய்வதுடன், போதுமான மருந்துகள் கிடைக்கவும் உடனடி மருத்துவச் சிகிச்சைக்குத் தேவையான மருத்துவக் குழுக்களை ஏற்படுத்தவும் வேண்டும்

தீர்மானம் 4 :

மக்களின் அடிப்படை ஆதாரமான நீர் உரிமையைப் பறித்துத் தனியாரிடம் நீர்ப்பாசனத்துக்காகவும், குடிநீருக்காவும் கையேந்தும் நிலைக்கு உள்ளாக்கும் வகையில் நதிநீர்ப் படுகை மேலாண்மைச் சட்டம் உருவாக்கப்படுவதை எக்காரணம் கொண்டும் ஏற்கவே முடியாது. எனவே, மத்திய அரசு, நதிநீர்ப் படுகை மேலாண்மைச் சட்ட முன்வடிவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் முடிவைக் கைவிட வேண்டும்.

தீர்மானம் 5 :

ஹைட்ரோ கார்பன், மீத்தேன், உள்ளிட்ட திட்டங்களை எதிர்த்து லட்சக்கணக்கான மக்களின் வாழ்வு உரிமைப் போராட்டம் எரிமலையென கிளர்ந்து எழும் என்று இக்கூட்டம் மத்திய – மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை செய்கிறது.

இந்த தீர்மானங்கள் தவிர்த்து எழுவர் விடுதலை, மீனவர்களுக்கு எதிரான இலங்கை அரசின் சட்டம் ரத்து செய்தல், பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்குக் கண்டனம், ஊடகங்களுக்கு எதிரான போக்குக்குக் கண்டனம், முல்லைப் பெரியாறில் கேரளா புதிய அணை கட்ட மத்திய அரசு வழங்கியுள்ள சுற்றுச்சூழல் ஆய்வு அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், நடப்பு ஆண்டில் (2018) நடைபெற உள்ள வங்கி எழுத்தர் பணிகளுக்கான தேர்வுகளில் மாநில மொழிகளில் தேர்ச்சி பெற்றோரை மட்டுமே தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம் என்று முன்பு இருந்தது போலவே விதிமுறையை மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related posts