சி.வி. ஆரம்பித்த புதிய கட்சியின் கொள்கைகள் என்ன..?

முன்னாள் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனின் புதிய கட்சி தமிழ் மக்கள் கூட்டணி ரி.எம்.கே என்ற பெயரில் அழைக்கப்படும்.

இக்கட்சிக்கான சின்னம், கொடி, கொள்கைகள் அடங்கிய கைநூல் எதுவும் இன்னமும் வெளியாகவில்லை.

ஆனால் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை முன்வைத்து பத்து யோசனைகளை அவர் முன் வைத்துள்ளார்.

அவற்றின் தொகுப்பு : துரோகத்திற்கு துணை போவதில்லை.. சலுகைகளுக்காக உரிமையை விட்டுக்கொடுப்பதில்லை.. போர் முடிந்தாலும் அதற்கான காரணங்கள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கிறது.

அரசாங்கத்தை விமர்சிக்க பயந்து அற்ப சொற்ப சலுகைகளை பெற்று கட்சி நடத்த இப்போது பலர் இருக்கிறார்கள்.

ஆனால் பழுதுபடாத தூய கரங்களை கொண்ட ஒரு புதிய கட்சியல்லாமல் ஏற்கெனவே உள்ள கறைபடிந்த கட்சிகளுடன் இணையாமல் தனிவழி செல்வதே சரி என்று கூறுகிறார்.

தமிழ் மக்கள் பேரவை ஏற்படுத்தியிருந்த கூட்டத்திலேயே அவர் இந்தப் பிரகடனத்தை செய்திருக்கிறார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் என்பது மக்கள் என்ற புதிய சொல்லை இணைத்திருக்கிறது. இதுவரை காலமும் மக்களிடம் வாக்குப் பெற ஓர் அரசியலும் பின் கொழும்பில் ஓர் அரசியலும் செய்யும் காலத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமானால் மக்களுக்காக செயற்படும் ஒரு கட்சி வேண்டும்.

அதிகார வர்க்கத்திற்கு வால் பிடிக்கும் கூட்டத்தோடு கூட்டமாக இருப்பது சரியல்ல என்று அவருடைய முழக்கம் இருந்தது.

அவர் கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டை வைக்கவே ஊடகம் ஒன்று காணொளியை நிறுத்திவிட்டது. அந்தளவு தூரம் தமிழர் விடுதலை கூட்டமைப்பை பகைக்க பயப்படுகிறார்கள் பலர்.

நிறையப்பேர் மதில் மேல் பூனைகளாக இருப்பதன் அடையாளமே இது.

ஆனால் கூட்டமைப்பையும், கூட்டணியையும், தமிழரசு, தமிழ் காங்கிரஸ் கட்சிகளை எதிர்த்து, அவர்களுக்கு மாற்றீடான சரியான ஓர் அணி கடந்த அரை நூற்றாண்டு காலமாக வடக்கே உருவாக்க முடியவில்லை.

அது இப்போதுதான் உருவாகியிருக்கிறது.. இது வெற்றி பெறுமா.. இதோ வெற்றிக்கு அவர்கள் கூறும் பத்து காரணங்கள்.

01. கசப்பான குரோதங்களை மறந்து சமஸ்டி அமைப்பை அகத்திலும் புறத்திலும் ஏற்று ஒழுகுதல்.

02. சமஸ்டியின் கீழ் வடக்கு கிழக்கை இணைக்க பாடுபடல்.

03. தடைப்பட்டுள்ள இனப்பிரச்சனை பேச்சுக்களை தொடர்வது.

04. இனப்பிரச்சனை போர்க்குற்ற விவகாரங்களை சிங்கள மக்களுக்கு அறியத்தந்து தீர்வு காணல்.

05. தனிப்பட்ட நலன்களை கைவிடுதல்.

06. அரசியலும் சமுதாயமும் சமாந்தரமாக இயங்க செய்தல்.

07. போரினால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுதல்.

08. சர்வதேச சமுதாயத்தின் உதவிகளுடன் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முயலுதல்.

09. இறுதி யுத்தம் இன அழிப்பே என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் ஆதாரங்களை திரட்டுதல். இது தொடர்பாக அரசுடன் கலந்துரையாடுதல்.

10. உலகம் முழுவதும் உள்ள மக்களுடன் இணைந்து எமது இலக்கை அடைதல் என்ற பத்து யோசனைகளை தமது கட்சியின் யோசனைகளாக முன் வைத்தார்.

இன்று முதல் நான் முதல்வர் இல்லை. எனது முதல்வர் அதிகாரம் உட்பட அனைத்தையும் ஒப்படைக்கிறேன்.

Related posts