பாரத இதயத்தில் இலங்கைக்கு என்றும் சிறப்பிடம்

பாரத இதயத்தில் இலங்கைக்கு என்றும் தனித்துவமான சிறப்பிடம் உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. இரு தரப்பு உறவுகள் மற்றும் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற இந்திய திட்டங்கள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் ஆரோக்கியமான கலந்துரையாடல் இடம்பெற்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரவிஸ்குமார் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையிலான பல்துறைசார் உறவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும் வடக்கில் இந்தியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும், வீடமைப்புத் திட்டங்களின் நிலை குறித்தும் இரு தரப்பு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான குழு சந்தித்து கலந்துரையாடியது . ஆழமான நட்புடன் இந்தியா அனைத்து வகையிலும் இலங்கைக்கு ஒத்துழைப்புகளை வழங்கும் என இதன் போது தெரிவித்த வெளிவிகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் , இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி அபிவிருத்தி திட்டங்களில் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts