ஜனாதிபதி மீதான கொலைச் சதியை மூடி மறைக்க முயற்சி

நாட்டின் தலைவரை படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சதித் திட்டத்தை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. பொலிஸாரின் விசாரணைகள் மீது தமக்கு நம்பிக்கை உள்ள போதும், அரசியல் மற்றும் சமூக நோக்கங்களுக்காக இந்த சதி முயற்சி விவகாரத்தை சிலர் மூடி மறைப்பதற்கு முயல்வதாக ஜனாதிபதியின் ஆலோசகர்கள் தெரிவித்தனர். கொழும்பில் நேற்று (18) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதியின் ஆலோசகர்களான சட்டத்தரணி ஷிரால் லக்திலக மற்றும் சட்டத்தரணி சரத் கோங்காகே ஆகியோர் இந்த விடயத்தை வலியுறுத்தினர்.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை படுகொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டதாக ஒருவர் கருத்துத் தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே தீவிரம் காட்டப்படவில்லை. இது ஒரு அரசியல் நாடகம், போலியான குற்றச்சாட்டு எனக் கூறி இதனை குறைத்து மதிப்பிடுவதற்கு அல்லது அவ்வாறானதொரு முயற்சியை மூடி மறைப்பதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப் படுவதாகவும் சட்டத்தரணி ஷிரால் லக்திலக குறிப்பிட்டார்.

இதற்கு முன்னரும் அரச தலைவர்களை படுகொலை செய்வதற்கான சதித்திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. பெரும்பாலன சம்பவங்கள் எல்.ரீ.ரீ.ஈயினரால் மேற்கொள்ளப்பட்டவை. ஆனால் பயங்கரவாதமில்லாத சூழலில் தற்போது ஜனாதிபதியைக் கொல்வதற்கு தீட்டப்பட்டுள்ள சதித்திட்டம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதன் பின்னயில் அரசியல் காரணம் உள்ளதா அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என்பது விசாரணைகளின் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும். இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் அரசியல் ரீதியான அதிகார மாற்றத்தை மேற் கொள் வதற்கு இதுபோன்ற பயங்கரவாத செயற் பாடுகளை, கையில் எடுப்பது வழமையாக உள்ளது. எனவே இந்த விவகாரத்தை எவரும் குறைத்து மதிப்பிட முடியாது என்றார்.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை படுகொலை செய்வதற்கு சதித்திட்டம் மேற்கொள்ளப் பட்டதாக வெளிப்படுத்திய நபர் பொலிஸாரின் ‘இன்போமர்’, உளவாளி, இது அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படும் நாடகம், வெளியிடப்பட்ட ஒலிப் பதிவு உண்மையற்றது எனப் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அது மாத்திரமன்றி பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நாலக்க.டீ.சில்வாவை பதவி நீக்குமாறும் சட்டம் ஒழுங்கு அமைச்சர் பொலிஸ் ஆணைக் குழுவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதுபோன்ற விடயங்களைப் பார்க்கும்போது சதித்திட்டத்தை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிகிறது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் நம்பிக்கை உள்ளது. எனினும் அரசியல் மற்றும் சமூக ரீதியாக இதனை மூடி மறைக்க சிலர் முயற்சிப்பதாகத் தெரிகிறது. குறிப்பாக அரசியல் நோக்கத்துக்காக இவற்றை குறைத்து மதிப்பிட ஒரு தரப்பு முனைப்புக் காட்டியிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்தச் சதித்திட்ட விவகாரத்தில் இந்திய நபர் ஒருவரின் தொடர்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இவற்றின் உண்மையான பின்னணி என்ன என்பது விசாரணைகளின் மூலமே தெளிவுபடுத்தப்பட வேண்டும். இதற்கு விரிவான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். குற்றவியல் விசாரணைகளுக்கு அப்பால் சிவில் சமூக ரீதியான விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என்றார்.

எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் படுகொலைக்கு தனிப்பட்ட விரோதம் காரணம் என்றே இறுதி விசாரணைகள் தெரிவித்தன. இவ்வாறான நிலையில் ஜனாதிபதி மீதான படுகொலை சதித்திட்டத்தை இலகுவாக எடுக்க முடியாது என சட்டத்தரணி சரத் கோங்காகே தெரிவித்தார்.

அதேநேரம், கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவின் புலனாய்வு அமைப்பு பின்னணியில் இருப்பதாக ஜனாதிபதி கூறவில்லை. படுகொலை சதித்திட்ட விவகாரத்தில் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதால் இந்திய புலனாய்வு அமைப்பையும் அதில் தொடர்பு படுத்துகின்றனர் என்றே கூறினார். ஜனாதிபதியின் இந்தக் கருத்து அமைச்சரவையில் இருந்த சிலரால் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்டிருக்கலாம். அவ்வாறு பிழையாக விளங்கியவர்கள் அதனை பிழையான முறையிலேயே ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கலாம் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

Related posts