ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் உதவி வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடந்தது

கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் அமைப்பு மன்னார் கணேசபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு உதவிகளை வழங்கும் நிகழ்வு நேற்று 17.10.2018 புதன் பகல் 10.00 மணியளவில் மன்னார் கணேசபுரத்தில் வெகு விமரிசையாக நடந்தேறியது.

இந்த நிகழ்வுக்கு வடக்கு கல்வி அமைச்சரின் செயலர் திரு. ந. அனந்தராஜ் அவர்கள் பிரதம விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார்.

அத்தருணம் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்குதல், போட்டோ பிரதி எடுக்கும் உபகரணம், சீருடைகள், புத்தகப்பை என்று சகலவிதமான தேவைகளையும் பூர்த்தி செய்யும் முயற்சியை புளுஸ் பவுண்டேசன் தாராள மனத்துடன் முன்னெடுத்திருந்தது.

ஏற்கெனவே இந்தப் பாடசாலையைச் சுற்றியிருந்த சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட காணியை துப்பரவு செய்து, முட்கம்பியால் பாதுகாப்பு வேலி போட்டு, நீண்ட கால அடிப்படையில் பயன்பெற வசதியாக தென்னை மரங்களை நட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் இது வளமிக்க ஒரு பாடசாலையாக உருவெடுக்க வேண்டுமென கனடாவில் இருந்து எடுக்கப்பட்ட அரிய சிந்தனையை இவ்வளவு விரைவாக நிதர்சனமாக காண்போமென தாம் நினைக்கவில்லை என்று பல பெற்றோர் சொன்னதை அத்தருணம் கேட்கக் கூடியதாக இருந்தது.

எழுத்தாளரும், கல்வித்துறை சார்ந்தவருமான திரு. ந.அனந்தராஜ் அவர்கள் உரையாற்றும்போது, வடக்கு மாகாணசபை தனது அதிகாரத்திற்கு உட்பட்டு அத்தனை உதவிகளையும் செய்யும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. இப்பாடசாலையின் வளர்ச்சியிலும் எதிர்கால முன்னேற்றத்திலும் ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் ஒரு நல்ல தோழன் போல தோள் கொடுக்கும் என்ற உறுதி மொழி வழங்கப்பட்டுள்ளமையானது பெற்றோருக்கும், மாணவருக்கும் புது நம்பிக்கை தருவதாகவும் இருந்தது.

பொதுவாக வெளிநாடுகளில் இருந்து செல்லும் உதவிகளில் பெரும்பங்கு இலங்கையில் உள்ள சில மோசடியாளர் கைகளில் சிக்குப்படுவதால் உண்மையான அபிவிருத்தி முன்னேற்றம் என்பன வெகு தொலைவிற்கு போயுள்ளன என்ற வருத்தம் இப்போது வெளிநாடுகளில் புதிய கவலையாக உருவெடுத்து வருகிறது.

ஆனால் இதிலிருந்து வேறுபட்டு மன். கணேசபுரம் அ.த.க பாடசாலைக்கான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். கனடா ரொரன்ரோ புளுஸ் அமைப்பானது நேரடியாகவே தனது கண்காணிப்பில் அனைத்துப் பணிகளையும் முன்னெடுத்த காரணத்தினால் குறுகிய காலத்தில் பெரிய வளர்ச்சியை காண முடிந்துள்ளது.

கனடாவில் இருந்து உதவிகளை வழங்க விரும்புவோர் அது சரியான இடத்திற்கு சென்றடையுமா என்பதை உறுதி செய்ய வேண்டுமானால் இது போன்ற வெற்றிகரமான பணிகளை முன்னெடுப்போரை கலந்தாலோசிப்பது நல்லதாகும் என்ற ஒரு யோசனையும் அத்தருணம் பலரிடையே பேசப்பட்டது.

உதவிகள் ஒருவருக்கே திரும்பத்திரும்ப போவது.. தேவையற்றவர்களுக்கு போய் சேர்வது.. உண்மையாகவே பாதிக்கப்பட்டோர் எதுவும் பெறாமல் ஏதிலிகளாகவே வாழ்வை தொடர்வது போன்ற அவலங்கள் இன்னமும் சீர்செய்யப்படவில்லை.

அந்தவகையில் சரியானவர்களை தேர்ந்தெடுத்து, அதை உறுதி செய்து வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரண்டிலுமே சம அளவில் ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் தன் ஆதரவுக்கரங்களை நீட்டியுள்ளதாக அதன் தொடர்பாளர் கூறுகிறார்.

கனடா வாழ் தமிழ் மக்களின் பொற் கரங்களால் ஒரு பாடசாலை தலை நிமிர்ந்து நிற்பது காற்றினிலே வரும் இனிய கீதமல்லால் வேறென்ன..?

அலைகள் 18.10.2018 வியாழன்

Related posts