‘ராட்சசன்’ வெளியீட்டுக்கு முன்பே இந்தி ரீமேக்

‘ராட்சசன்’ படம் வெளியாகும் முன்பே அதன் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்றியுள்ளார் விஷ்ணு விஷால்.

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராட்சசன்’. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை ஆக்சிஸ் ஃபிலிம் பேக்டரி தயாரித்திருக்கிறது.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தற்போது இதன் ரீமேக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவி வந்தது. கடும் போட்டிக்கு இடையே கன்னட ரீமேக் உரிமையை முன்னணி தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தற்போது தெலுங்கு ரீமேக் உரிமைக்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், இந்தி ரீமேக் உரிமையை படத்தின் வெளியீட்டுக்கு முன்பே தனக்கு வேண்டும் என்று வாங்கியிருக்கிறார் விஷ்ணு விஷால். படத்தின் கதை மீது நம்பிக்கை வைத்த முதல் ஆள் அவர் தான். ஆகையால் தான் அதன் இந்தி ரீமேக் உரிமையை முதலிலேயே கைப்பற்றிவிட்டார் என்று பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகும் ‘காடன்’ படத்தில் கவனம் செலுத்த உள்ளார் விஷ்ணு விஷால்.

Related posts