‘மீ டூ’வுக்கு சித்தார்த், நதியா, ஹூமா குரோஷி ஆதரவு

‘மீ டூ’வுக்கு சித்தார்த், நதியா, ஹூமா குரோஷி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீதான பாலியல் தொல்லைகளை அம்பலப்படுத்தும் மீ டூ இயக்கத்துக்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நடிகர் சித்தார்த் இதுகுறித்து கூறியதாவது:-

“மீ டூ விஷயத்தில் தமிழ் திரையுலகம் மவுனத்தில் இருக்கிறது. கடலில் மீன் அழுதால் கரைக்கு சேதி வந்து சேருமா? இன்னும் பல பெயர்கள் வெளிவந்தால்தான் தமிழ் பட உலகம் குரல் கொடுக்குமா? பணிபுரியும் அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அதற்காக சிஸ்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும்.” என்று அவர் கூறினார்.

நடிகை நதியா கூறியதாவது:-

“அதிகாரத்தில் இருப்பவர்கள் பெண்களை தவறாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்கு எதிராக இப்படி ஒரு அமைப்பு வந்து இருப்பது வரவேற்கத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும் என்பது எனது கருத்து.

‘மீ டூ’ இயக்கத்தில் அனைத்து தரப்பு பெண்களும் பாலியல் கொடுமைகள் குறித்து பேசி வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு தைரியத்தை மீ டூ கொடுத்து இருக்கிறது. இந்த இயக்கம் சமூகத்தில் மேல் மட்டத்தில் இருக்கும் பெண்களின் பிரச்சினைகளை மட்டுமே வெளியே கொண்டு வந்துள்ளது. இதை அனைத்து பெண்களும் பயன்படுத்த வேண்டும். தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி இதில் தைரியமாக பேச வேண்டும்” என்று கூறினார்.

ரஜினிகாந்துடன் காலா படத்தில் நடித்துள்ள ஹூமா குரோஷி டுவிட்டரில், “எனது கடைசி மூச்சு இருக்கும்வரை மீ டூ இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பேன். அதே நேரம் நான் ஆண்களுக்கு எதிரானவள் இல்லை” என்று கூறியுள்ளார்.

Related posts