ஜேர்மனியின் தென்புல பெயரன் மாநிலத்தில் இன்று தேர்தல்

இன்று ஜேர்மனியின் தென்புலத்தில் உள்ள பெயரன் மாநிலத்தில் தேர்தல் இடம் பெறுகிறது.

ஜேர்மனிய சாஞ்சிலர் ஏஞ்சலா மேர்க்கலின் கூட்டு கட்சியான சி.எஸ்.யு கட்சி இந்த மாநிலத்தில் கடந்த அறுபது வருடங்களாக பலம் மிக்க கட்சியாக இருக்கிறது.

இப்பகுதியில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் காரணத்தால் இக்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் மேர்க்கலின் சி.டி.யு கட்சிக்கும் பிரகாசமான எதிர்காலம் இருந்தது. ஆனால் இந்தத் தடவை அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கிறது. வெறும் 35 வீதமான ஆதரவையே கருத்துக்கணிப்பில் பெற்றுள்ளனர்.

ஏஞ்சலா மேர்க்கலின் ஆட்சிக்காலம் நீண்டதாக இருக்கிறது. எவ்வளவுதான் செய்தாலும் ஒரே வித்துவானின் கச்சேரியை மக்கள் அதிகம் ரசிக்க மாட்டார்கள். புதிய முகத்திற்காக காத்திருக்கிறது ஜேர்மனி.

அகதிகள் விவகாரத்திலும் மேர்க்கல் பின்னடைவு கண்டுவிட்ட நிலையில் முதற்தடவையாக இந்த மாநிலத்தை கோட்டைவிடப் போகிறார்கள் என்றே செய்தியாளர் கூறுகின்றனர்.

கடும்போக்கு கட்சிகளின் வரவு மேர்க்கலின் கனவு கோட்டையில் மண்ணள்ளி போட்டு வருகிறது.

இதற்கிடையில் இன்று ஜேர்மனியின் கிழக்கு பகுதியில் துவேஷத்திற்கு எதிரான ஆர்பாட்ட ஊர்வலம் ஒன்று நடைபெற இருக்கிறது.

இந்த ஊர்வலத்தில் சுமார் ஒன்றரை இலட்சம்பேர் பங்கேற்க இருக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களாக ஜேர்மனியில் துவேஷத் தாக்குதல்கள் பெருகி வருகின்றன. இதுபோன்ற ஒரு போக்குத்தான் ஒரு காலத்தில் ஹிட்லர் என்ற சர்வாதிகாரியை உருவாக்கி உலகையே மோசமான இடத்தில் தள்ளியிருந்தமை தெரிந்ததே.

ஆகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போல இந்த ஆர்பாட்ட ஊர்வலம் இருக்கிறது. இவர்கள் நாஜி கொள்கைகள் இனி இந்த நாட்டுக்கு வேண்டவே வேண்டாம் என்கிறார்கள்.

துவேஷ கொள்கைகளை மாற்றி மக்கள் மீது அன்பையும் மரியாதையையும் பொழியுங்கள் என்கிறார்கள்.

இந்த ஊர்வலம் துவேஷப்போக்கை தடுக்கிறதோ இல்லையோ ஜேர்மனியை மற்ற நாடுகள் இன்னொரு தடவை சூறையாட முடியாது தடுப்பது அவசியமாகும். இதற்கு முந்தைய இரண்டு உலக யுத்தங்களைவிட வேறென்ன சாட்சியங்கள் வேண்டும்.

அலைகள் 14.10.2018

Related posts