இன்னும் 68,000 வீடுகளை நிர்மாணிக்க வேண்டும்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமது அமைச்சினால் ஒரு இலட்சத்து 86 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க வேண்டியுள்ள நிலையில் 18,000 வீடுகளே கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்னும் 68,000 வீடுகள் நிர்மாணிக்க வேண்டியிருப்பதாக மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி. எம். சுவாமிநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதியொதுக்கீட்டுக்கிணங்கவே வீடமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதற்கிணங்க முதல் வருடத்தில் 11 பில்லியன் ரூபா செலவில் 11,000 வீடுகளும் இரண்டாம் வருடத்தில் 14,000 பில்லியன் ரூபாவில் 7,000 வீடுகளையும் நிர்மாணிக்க முடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வருடம் 750 மில்லின் ரூபா நிதியே ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், நிதியொதுக்கீட்டுக் கிணங்கவே வீடுகளை நிர்மாணிக்க முடியும். இதில் எந்தப் பிரதேசம், எந்த சமூகத்தினர் என்ற பாரபட்சத்திற்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வாய்மூல விடைக்கான வேளையில் இஷாக் ரகுமான் எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அநுராதபுரம் மாவட்டத்தில் யுத்தத்தின்போது இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு வீடுகள் வழங்கப்படுவது தாமதமாவதாக அவர் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர்:

அநுராதபுரம் மாவட்டத்தில் இடம் பெயர்ந்தோருக்காக 266 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. இன்னும் 64 வீடுகளே வழங்க வேண்டியுள்ளது. அடுத்து வரும் வருடங்களில் ஒதுக்கப்படும் நிதிக்கேற்ப அந்த வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெவித்தார்.

Related posts