பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர் : சின்மயி ( காணொளி )

மீடூ விவகாரத்தில் பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என பேஸ்புக் நேரலை வீடியோ மூலம் சின்மயி விளக்கம் அளித்து உள்ளார்.

கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் புகார் சொன்னது தமிழ் திரையுலகை அதிர வைத்துள்ளது.

இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக வலைத்தளத்தில் கருத்துக்கள் பதிவாகின்றன. சுவிட்சர்லாந்தில் பாலியல் சம்பவம் நடந்த பிறகு 2014-ல் நடந்த தனது திருமணத்துக்கு வைரமுத்துவை சின்மயி அழைத்து அவர் காலில் விழுந்து ஆசிபெற்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

பாலியல் தொல்லை கொடுத்தவர் என்பது தெரிந்து இப்படி காலில் விழலாமா? என்று சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர். சின்மயியை வைரமுத்து ஓட்டலில் சந்திக்க சொன்னது எப்படி பாலியல் குற்றமாகும் என்றும் பதிவிட்டுள்ளனர்.

பாலியல் புகார்களால் தமிழ், தெலுங்கு பட உலகை கதிகலங்க வைத்த நடிகை ஸ்ரீரெட்டி பாடகி சின்மயிக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் பாடகி சின்மயி தனது பேஸ்புக் நேரலையில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளதாவது:-

மீடூ விவகாரத்தில் ஆண்களும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை கூறத் தொடங்கி உள்ளனர். சிறுவயதில் ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறது.

வைரமுத்துவால் பிற பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வைரமுத்து தவறாக நடந்து கொண்டார் என்பதை கூற சக பாடகிகள் பலருக்கு தயக்கமாக உள்ளது .

ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணிடம் கேட்டாலும் தங்களுக்கு நிகழ்ந்த பார்த்த பிரச்சினைகளை கூறுவார்கள். தவறுகளை தட்டி கேட்டால், தெரிவித்தால் அந்த பெண்கள் குறித்து சந்தேகம் எழுப்பப்படுகிறது.

என் திருமணத்திற்கு மக்கள் தொடர்பாளர் மூலம் தான் வைரமுத்துவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. வைரமுத்துவை அழைக்கவில்லை என்றால் அதற்கான காரணத்தை சொல்ல நேரிட்டு இருக்கும். மீடூ விவகாரத்தில் ஆண்களும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை கூறத்தொடங்கி உள்ளனர்.

அரசியல் பின்புலத்துடன் இருக்கும் வைரமுத்துவை எதிர்க்க அப்போது தைரியம் இல்லை. வைரமுத்து மீது நான் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை. பாலியல் துன்புறுத்தல் செய்தவர்கள்தான் வெட்கப்பட வேண்டும்; நான் வெட்கப்பட மாட்டேன்.

சிறார்கள் மீதான பாலியல் துன்புறுத்தலில் விழிப்புணர்வு ஏற்பட்டு உள்ளது. பாலியல் தொந்தரவு விவகாரத்தில் ஆண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது இல்லை என கூறி உள்ளார்.

Related posts