அரசியலமைப்பு சபைக்கு செல்வகுமாரன்

அரசியலமைப்பு சபைக்கு நியமிக்கப்பட வேண்டிய மூன்று சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய,, பேராசிரியர் ஜயந்த தனபால, சட்டத்தரணி அஹமட் ஜாவிட் யூசுப், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் நாகநாதன், ஆகியோரை அரசியலமைப்பு சபையின் சிவில் பிரதிநிதிகளாக நியமிக்க பாராளுமன்றம் இன்று (11) அனுமதி வழங்கியுள்ளது.

அரசியலமைப்பு சபைக்கு கடந்த 2015 இல் நியமிக்கப்பட்ட, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன் செனவிரட்ன, விஜித ஹேரத், திலக் மாரப்பன, விஜேதாச ராஜபக்‌ஷ ஆகியோரினதும், சிவில் உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தணி சிப்லி அஸீஸ், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் வழக்கறிஞருமான ராதிகா குமாரசுவாமி, சர்வோதய ஷ்ரமதான இயக்கத்தின் ஸ்தாபகரான கலாநிதி ஏ.ரி. ஆரியரத்ன ஆகியோரின் பதவிக் காலங்கள் மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

அரசியலமைப்பு சபைக்கு ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தொடர்ந்தும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டம் மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல மற்றும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ ஆகியோர் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரால் அரசியலமைப்புப் பேரவை உறுப்பினர்களாகப் பிரேரிக்கப்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

19ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு அமைய சுயாதீன ஆணைக்குழுக்களின் நியமனம் மற்றும் உயர் பதவிகளுக்கான நியமனங்களை அரசியலமைப்பு பேரவையே தீர்மானிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அரசியலமைப்பு பேரவையின் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட பின்னர் புதிய பிரதம நீதியரசர் யார் என்பதை தீர்மானிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள பிரதம நீதியரசரின் பதவிக்காலம் எதிர்வரும் சில நாட்களில் முடிவடைகிறது. இந்த நிலையில் அடுத்த நீதியரசராக தற்போதைய சட்டமா அதிபரின் பெயரை ஓர் அரசியல் கட்சி பரிந்துரைக்க விருப்பதாகத் தெரியவருகிறது.

Related posts