மனிதர்களுடன் உரையாடும் முதல் பெண் ரோபோ

நிதி தொழில்நுட்பத்தின் வருங்காலம் குறித்து அக்டோபர் 23-ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ள மாநாட்டில் உலகின் முதல் பெண் ரோபோ சோபியா பேசுகிறார்.

நிதித் தொழில்நுட்பத்தின் வருங்காலம், வளர்ச்சி குறித்து விசாகப்பட்டினத்தில் உள்ள ஃபிண்டெக் வேலியில் அக்டோபர் 22 முதல் 26 வரை மாநாடு நடக்க உள்ளது. இதில் சோபியா கலந்துகொள்கிறார்.

அக்டோபர் 22-ம் தேதி சிங்கப்பூரில் இருந்து ஆந்திரா வரும் சோபியாவுக்கு, அன்றே செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட தொழில்நுட்ப விஷயங்கள் பொருத்தப்படும்.

முன்கூட்டிய தீர்மானிக்கப்பட்ட தலைப்புகளில் சோபியா உரை நிகழ்த்த உள்ளார்.

கலந்துரையாடலில் சோபியா

அடுத்த நாள் மாநாட்டில் பேசும் சோபியா, நிதித்துறை வல்லுநர்கள், முதலீட்டாளர்கள், ஐடி அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடுகிறார். இந்த விழாவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொள்கிறார்.

சோபியாவை இயக்கும் பொறியாளர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும், ரோபோவுடன் விசாகப்பட்டினம் வருகின்றனர்.

யார் இந்த சோபியா?

ஹாங்காங்கைச் சேர்ந்த ஹான்சன் ரோபாடிக்ஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மனித ரோபோ சோபியா. உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு ரோபோவான சோபியாவுக்கு ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் கணக்குகள் உள்ளன.

மனிதர்கள் முகத்தில் காட்டும் உணர்ச்சிகளில் 48 தசைகளின் அசைவுகளை சோபியாவால் கொண்டு வர முடியும். ரோபாடிக் ஹார்ட்வேர், செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மற்றும் செயற்கை தோல் அமைப்பு ஆகியவற்றின் கூட்டே இந்த ஹ்யூமனாய்ட் ரோபோ.

குரலை உணர்ந்துகொள்ளும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள சோபியாவால் நமது முகங்களைப் படிக்க முடியும். இதற்காக சோபியாவின் கண்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவை கணினி அல்காரிதம்கள் மூலம் செயல்படுகின்றன. இதன்மூலம் நாம் கேட்கும் கேள்விக்கு ஏற்ப சோபியா பதில் கூறுவார்.

ரோபோ சோபியாவுக்கு சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts