உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 18. 40

தேவனுடைய உண்மையும் நம்முடைய பாதுகாப்பும்
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகோபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்.

சங். 121:7.

புதிய மாதத்தில் ஆசீர்வாதமான சிந்தனையுடன் அலைகள் வாசகநேயர்களை ஆசீர்வாதமான வாழ்வை அடைந்து கொள்படியாக அழைத்துச் செல்கிறேன்.

நாம் வாழும் இந்த பூமி தீங்குநிறைந்த ஓர் இடமாகும். பலகொடிய நோய்கள், கொடிய தீயமனிதர்கள், விபத்துக்கள், தீங்குகள், மந்திரதந்திர கெடுதிகள் இப்படியாக பலதீங்கான காரியங்களை நாம் அடுக்கிக்கொண்டு போகலாம். இவை எல்லா வற்றையும் முன்கூட்டியே அறிந்த சங்கீதக்காரனாகிய தாவீது ஒவ்வொரு தீமையாய் சொல்ல பிரியப்படாமல் எல்லாத்தீங்கிற்கும் என ஒட்டு மொத்தமாக ஒரே வார்த்தையில் இந்த சங்கீதத்தில் மிகத்தெளிவாக கூறியுள்ளார்.

அப்போஸ்தலனாகிய பவுல் இதனை கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார் என 2 தெசலோனிக்கியர் 3:3 இல் எழுதியுள்ளார்.

இங்கு நாம் கவனிக்க வேணடியது, கர்த்தர் நம்மை தீமைகளில் இருந்து காத்துக்கொள்வாரோ? காத்துக்கொள்ளமாட்டாரோ? என்ற சந்தேகப்பட வேண்டிய அவசியம் நமக்கு இல்லை என்பதை. காரணம் மேல் கண்டவாறு வாக்குப்பண்ணியவர் உண்மையுள்ளவர். நாம் பல வேளைகளில் உண்மையில்லாதவர்களாக இருந்தாலும், அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அவர் தம்மைத்தாமே மறுதலிக்க மாட்டார். (2தீமோத்தேயு 2:13). காரணம் நம்முடைய பாதுகாப்பு தேனுடைய உண்மை என்ற திட அஸ்;திவாரத்தில் இருக்கிறது. அவர் உண்மையுள்ளவர். பொய்சொல்ல அவர் மனிதன் அல்ல. அவர் பொய்யுரையாத தேவன் (தீத்து 1:2). எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் (எபி. 6:18).

தேவன் நம்மை தமது இரத்தத்தினாலேமீட்டு, இரத்தக்கோட்டைக்குள் மறைத்து வைத்து காப்பார். சுடரொளி பட்டயங்கள், தேவதூதர்களைக் காவல் வைத்து, அக்கினி இரதமான குதிரைகளையும் இரதங்களையும் அனுப்பி காத்துக்கொள்வார். பணிவிடையான தேவதூதர்களை அனுப்பி பாதுகாப்பார். எல்லாவற்றிற்கும் மேலாக தமது சிறகுகளாலேமூடி செட்டைகளுக்குள்ளே மறைத்து கண்மணிபோல பாதுகாத்துக்கொள்வார்.

நமக்கு ஒரு பாதுகாப்பு அவசியம். நமக்கு ஒரு அடைக்கலம் அவசியம். காரணம் நாம் வாழும் உலகத்தில் எதிர்பாராத நோய்கள், பயத்தின் விளைவினாலான பலவீனங்கள் மனுசரைத் தாக்குகிறது. கர்த்தரின் நாமம் பலத்த துருகம்@ நீதிமான் (தேவனைத் தேடுபவன்) அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான் (நீதி.18:10). கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை (தம்மைத் தேடுபவர்களை) இரட்சித்து, தம்முடைய பரமராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார் (2தீமோ.4:18).

இந்த தியானத்தில் பலவழிகளில் இருந்துவரும் தீங்கையும், அவற்றில் இருந்து தேவன் காக்கும் விதங்களையும் சேர்த்து தியானிப்போம்.

தேவனைத்தேடும் பிள்ளைகளுக்கு முதலில்வரும் தீங்கு உறவினர்கள், நண்பர்கள் மூலம்தான். இந்த தீங்கு இயேசுவிற்கும் ஏற்பட்டது. அதனால் அவர், மனுஷனுடைய சத்துருக்கள் அவன் வீட்டார்தானே என்றார். (மீகா 7:6 மத்.10:36). ஒரு சீசன் காட்டிக்கொடுத்தான். இன்னொருவன் மறுதலித்து சத்தியம் பண்ணினான். ஏனைய சீசர்கள் தனிமையாக விட்டுவிட்டு ஓடினார்கள். சொந்த சகோதரரால் காயப்படுத்தப் பட்டார். இறுதியாக சிலுவையில் தொங்கும்போது அவமதித்து பரியாசம் பண்ணப்பட்டார்.

ஆனாலும் அவர், அவர்கள் மேல் கோபம் கொள்ளவில்லை. பிதாவின் சித்தத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்து, நமக்கு வரும் எல்லாத் தீங்குகளையும் பொறுமையோடும், தேவ வழிநடத்தலோடும் வெற்றிபெறும் வழியை எடுத்துக் காட்டியுள்ளார். இதனை நாம் ஆதி.31:19-34ல் காணலாம். அன்று ராத்திரியிலே தேவன் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சொப்பனத்தில் தோன்றி: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்றார். நாம் புரிந்துகொள்ளவேண்டியது, தீமைசெய்ய வந்தகரங்களை யாக்கோபோடு உடன்படிக்கை செய்யும் கரங்களாக தேவன் மாற்றிவிட்டார். காரணம், ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமா யிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார் நீதி.16:7

உடனாளிகளிடம் இருந்து வரும் தீமைகளிலிருந்து தேவன் காத்துக்கொள்வார். சவுல் – தாவீதின், தானியேலின் வாழ்க்கையை நாம் அறிந்து கொண்டால் இந்த உண்மையை நன்கு அறிந்து கொள்ளலாம். பலமுறை தாவீதுக்கு சவுலினிடத்தில் இருந்து தீமைகள் வந்தது. பல தடவைகள் தாவீதை கொல்ல முயற்சித்தான். ஆனால் கர்த்தரோ தாவீதை தீமைகள் அணுகாதபடி காத்துக்கொண்டார். நீ எனக்கு நன்மை செய்தாய், நானோ உனக்கு தீமை செய்தேன் என்று சவுல் தன் வாயால் தான் செய்த தீமையை ஒப்புக்கொண்டதை காணக கூடியதாகவுள்ளது.

நாம் தேவனை சாரும்போது எல்லாத்தீங்கிற்கும் விலக்கி நம்மைக் காத்துக் கொள்வார். அதுமட்டுமல்லாமல் எந்த இடத்தில் தலைகுனிய வேண்டுமென்று சத்துரு விரும்பினானோ, அதேஇடத்தில் கர்த்தர் ஒரு பந்தியை ஏற்ப்படுத்தி எங்கள் தலையை எண்ணையால் அபிசேகம் பண்ணுவார். கனப்படுத்துவார், உயர்ந்தஅடைக்கலத்தில் அமரவைப்பார். வேலை செய்யும் இடங்களில், ஊழியங்களில், எந்த இடமானாலும் தேவனை சாரும்போது இந்த வாக்குறுதியால் காத்துக்கொள்வார். இஸ்ரவேலே நீ பாய்க்கியவான், உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்@ அவர்கள் மேடுகளை மிதிப்பாய் உபா.33:29.

பிசாசானவன் பலவழிகளில் நமக்கு தீமைசெய்யக்கூடும். எந்த நன்மையான காரியங்களை செய்யவோ அல்லது அடையவோ முடியாதபடி செயற்படுவான். அமைதியைக் குலைத்து எமது கவனத்தை திசைதிருப்பி தவறான வழிக்கு எம்மைத் திருப்புவான். நாம் தேவனைசார்ந்து அவரின் வாக்குறுதிகளை சொந்தமாக்கி வாழும்போது சத்துருவிடத்தில் இருந்துவரும் எந்த தீமைகளும் எம்மை அணுகாது. சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடுவாய். நாம் அவைகள் மேல் வெற்றி சிறப்போம்.

கொடுரமான மனிதர்களிடம் இருந்து தேவன் எம்மை காத்துக் கொள்வார். கொடூரமானவர்களின் சீறல் மதிலைமோதியடிக்கிற பெருவெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்; ஏசாயா 25:4.

பலவருடங்களுக்கு முன்னர் தென்ஆபிரிக்காவில் ஓர் தேவஊழியர் மேடையில் நின்று பிரசங்கித்துக்கொண்டிருந்தார். ஒரு கொடியவன் துப்பாக்கியுடன் மேடைக்கு வந்து அதனை அவரின் பாதத்தடியில் வைத்து, நான் உம்மை சுடமுயற்சித்தேன். ஆனால் உமக்கும் எனக்கும் நடுவில் கெம்பீரமான தோற்றமுடைய தெய்வீகபுருசன் ஒருவர் நிற்பதைக்கண்டேன். உடனே எனது துர்எண்ணங்கள் எல்லாம் மாறிவிட்டது என்னை மன்னியுங்கள் என்றான். அநாதி தேவனே உனக்கு அடைக்கலம் அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம் உபா.33:27

இப்படி இன்னும் பலவகையான தீங்குகள் எம்மை நோக்கி வரலாம். நாம் தேவனை சார்ந்து, அவரின் வாக்குறுதிகளை கடைப்பிடித்து வாழும்போது தேவன் நமக்கு வரும் சகல இக்கட்டுக்களிலும் இருந்து நம்மை காத்துக் கொள்வார். ஆகவே எல்லாத் தீமைக்கும் விலக்கிக் காக்கும் தேவனிடம் நாம் சரணடைந்து, அவரின் வாக்குறுதிகளை அறிக்கையிட்டு; வெற்றி வாழ்க்கை வாழ எம்மை அர்ப்பணிப்Nhhம்.

கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் தம்மை அண்டியவர்களை இரட்சித்து, தம்முடைய பரமராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார் அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!

Bro, Francis T. Anthonypillai. Rehoboth Ministries Praying for Denmark

Related posts