ரூ.4 ட்ரில்லியன் கடன் செலுத்த வேண்டிய நிலையில் இலங்கை

வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு அரசாங்கம் 4 ட்ரில்லியன் ரூபாவை கடனாக செலுத்த வேண்டியுள்ளது. இது கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடனெனவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

பொருளாதாரத்திலும் நிதிநிலையிலும் மிக மோசமான நிலைக்கு நாட்டை இட்டுச்சென்ற கூட்டு எதிர்க்கட்சியினர் இன்று சிறுபிள்ளைகளைப் போல் அனைத்தையும் மறந்து நாட்டின் பொருளாதாரத்தை விமர்சித்து வருவது விந்தையாகவுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த இரண்டு மூன்று மாதங்களில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் கூட்டு எதிர்க்கட்சியானது நாட்டின் முழுப் பொருளாதாரமும் படுவீழ்ச்சியடைந்துள்ளதாக விமர்சித்து மக்களை திசை திருப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது.

நாட்டில் இது தொடர்பில் மோசமான கருத்துக்களை அவர்கள் முன்வைத்து வருகின்றனர்.

2015 ஜனவரி 8ம் திகதி நாம் அரசாங்கத்தைப் பாரமெடுத்த போது நாட்டின் பொருளாதாரம் எவ்வாறு இருந்தது என்பதை அவர்கள் மறந்து பேசுகின்றனர். நாம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமை மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்திருந்த காலத்திலேயே நாட்டைப் பொறுப்பேற்றோம்.

1990 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது நாட்டின் வருமானம் 20 வீதமாகவே இருந்துள்ளது. எனினும் ராஜபக்ஷகுடும்பத்தினரின் பொருளாதாரத் திட்டத்தின் போது 2014இல் அது நான்கு வீதமாக வீழ்ச்சியடைந்தது. 2006 இல் 25.8 வீதமாக இருந்த போதும் 2014இல் அது 5.1 வீதமாக விழ்ச்சியடைந்தது.

அரச வருமானத்தைவிட அரசாங்கத்தின் செலவுகள் அதிகரித்திருந்தது. வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு அரச செலவினங்கள் அதிகரித்துள்ளன. 2013இல் அரச வருமானம் 1663 ஆக இருந்தது. அதேவேளை அரசாங்கத்தின் செலவு 1667 ஆக இருந்தது. முதலீடுகள் அனைத்துமே வீழ்ச்சியடைந்திருந்தது. இதற்கிணங்க 2014ம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் மற்றும் செலவுகளுக்கு இடையே 600 மில்லியன் ரூபா வித்தியாசம் காணப்பட்டது. அரசாங்கத்தின் முழு- வருமானத்தை கடன் செலுத்துவதற்காகவே உபயோகிக்க நேர்ந்தது. 2013இல் 1937 மில்லியனாக இருந்த போது 1448 மில்லியன் கடனாகச் செலுத்த வேண்டியிருந்தது. அரசாங்கததின் வருமானத்தை விட கடன் அதிகமாக இருந்தது. இது போன்ற மிக மோசமான பொருளாதார நிலையிலேயே நாம் அரசாங்கத்தைப் பாரமெடுத்தோம்.

நாம் பெரும் கடன் சுமையுடனேயே செயற்பட்டு வருகின்றோம். இந்த வருடத்தில் நாம் ஒருபோதும் இல்லாதவாறு 1.9 ட்ரிலியனை கடனாகச்செலுத்த வேண்டியுள்ளது. அடுத்த வருடம் 2 ட்ரிலியின் கடன் செலுத்த வேண்டியுள்ளது. 2020 இலும் அதே போன்ற செலவை கடனாகச் செலுத்த வேண்டியுள்ளது. எதிர்வரும் இரண்டு வருடங்களில் நாம் 4 ட்ரிலியன் ரூபாவை கடனாகச் செலுத்த வேண்டியுள்ளது. இதற்காக நாம் கடன் பெறவேண்டியுள்ளது. அவ்வாறு செலுத்தப்படும் கடன்களில் 85சத வீதம் ராஜபக்ஷ ஆட்சியின் போது பெறப்பட்ட கடனே.

இவற்றை மறந்துவிட்டு மக்கள் மத்தியில் இவர்கள் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்கள் அபிவிருத்தித் திட்டங்களில் கமிசன் பெற்றுக்கொண்டதன் மூலம் பெருமளவு நிதி விரயமானது. இதற்கிணங்க அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மூலம் 2014ம் ஆண்டு வரை 46 பில்லியன் நட்டமேற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு முழு வருடத்திலும் இந்தளவு நிதி கிடைப்பதில்லை. மத்தல விமான நிலையத்திற்கு 8.3 பில்லியன் நட்டமேற்பட்டது. மிஹின்லங்கா நிறுவனத்தை நாம் பாரமெடுத்த போது 17.3 பில்லியன் நட்டமேற்பட்டு இருந்தது. ஸ்ரீலங்கன் விமானச் சேவை 169 மில்லியன் நட்டமேற்பட்டிருந்தது.

எமது ஏற்றுமதித்துறை பெரும் வீழ்ச்சியடைந்திருந்தது. இதற்கிணங்க எதிர்வரும் 2 வருடங்கள் வரலாற்றில் அரசாங்கம் செலுத்தும் அதிகளவு கடனாக கருத முடியும் என்றும் அவர் மேலும். தெரிவித்தார்.

Related posts