அலைகள் வாராந்தப் பழமொழிகள் 10.10.2018 புதன்

01. மத சகிப்புத்தன்மையற்ற பழக்கங்களை சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு போதிக்கக் கூடாது. மதம் சார்ந்த விடயங்களில் ஒத்துப்போக முடியாதபோதுதான் ஒருவரை ஒருவர் அழிக்க முயலும் கொடிய போர்களுக்குள் மக்கள் போகிறார்கள்.

02. நமக்கு பூமியில் வாழ ஒதுக்கப்பட்ட காலம் மிகவும் சொற்பமானது. ஒரு மெழுகுவர்த்தி எரியும் காலத்தைப் போல மிகவும் குறுகலானது. இதை புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். மரணம் என்ற அறிவிப்பு வரும்போது மரணம் என்ற பயணக்குழுவினருடன் போக வேண்டி வரும் ஆகவே இப்போதே கிடைத்த மணிகளை சிறப்பாக பயன்படுத்துங்கள்.

03. உலகில் நிலவிவரும் குழப்பம், கலவரம் போன்றவை யாவும் எதனால் உருவாகுகின்றன ? சகிப்பு தன்மை இல்லாத காரணத்தினால் உருவாகின்றன. முதலில் நமக்குள் உள்ள விரோதம், அறியாமை, மூடத்தனம் போன்ற சில்லறைத்தனங்களை கை கழுவி விட்டுவிட வேண்டும்.

04. ஏதோ ஒரு தலைவிதி நம்மை சகோதரர்களாக படைத்துவிட்டது. இதிலிருந்து யாரும் விடுபட்டுவிட முடியாது. மற்றவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்கே நாம் அனுப்பப்பட்டிருக்கிறோம். அது நமக்கு நன்மை தருவதாகவே உள்ளது என்பதை தயவு செய்து புரியுங்கள்.

05. அதிகாரத்தில் இருப்பவர்கள் தமது திறமைகளை வளர்த்து படிப்படியாக மேலே வளர்வதே சரியானது. ஒரு போதும் மேலே உள்ளவனை அழித்து அந்த இடத்திற்கு வர முயலக்கூடாது. ஆனால் இன்றைய அரசியலின் மிகப்பெரிய கொடுமையாக மற்றவனை பதவி கவிழ்க்கும் இழி செயலே முதன்மையாக இருக்கிறது.

06. எப்பொழுதுமே நன்றாக சிந்தியுங்கள் அது சிறப்பான விடயம். ஆனால் நன்றாக செயற்படுவது புனிதத் தன்மைக்கு நிகரான செயலாகும்.

07. உங்களுடைய பதவி நிலைக்க வேண்டுமா.. பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அதை அவர்களுக்கு செய்யுங்கள்.

08. அழிவற்ற ஒரு சாஸ்வதமான கோட்பாடு செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. எதை நீங்கள் விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்கிறீர்கள்.

09. நீங்கள் மற்றவர்களிடம் எப்படி நடக்கிறீர்களோ அப்படியே மற்றவர்களிடமிருந்து உங்களுக்கான எதிர்வினையும் வரும்.

10. நீங்கள் செய்யும் அநியாயமான செயல்கள் மாலைப் பொழுதில் கூடு திரும்பும் பறவைகள் போல மறுபடியும் உங்களிடமே திரும்பி வந்துவிடும். இதுதான் இயற்கையின் நியதி.

11. எந்தவிதமான எண்ணங்களை வெளிப்படுத்துகிறீர்களோ அதே விதமான எண்ணங்களை இயற்கை உங்கள் மீதும் திருப்பி அனுப்பும்.

12. மற்றவர் எவ்வளவு உயர்வாக உங்களை மதிக்க வேண்டும் என்று கருதுகிறீர்களோ அதேயளவு உயர்வாக அவர்களையும் மதியுங்கள்.

13. இவைகளை எல்லாம் நன்கு சிந்தித்து அக்கறை எடுக்கும்போதுதான் உங்கள் வாழ்வின் முக்கியத்தை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.

14. அதிகாரத்தை பெருக்குவது, பணத்தை பெருக்குவது என்றே மனிதன் ஓடுகிறான். இதனால் அவன் பிரார்த்தனையின் முக்கியத்துவத்தை மறந்துவிடுகிறான்.

15. மற்றவர்களிடமிருந்து தீய பழக்கங்களை விரைவாக பழகும் ஒருவன் ஒரு காலமும் நல்லவனாக இருக்க முடியாது. காரணம் மற்றவர்களிடமுள்ள நல்ல விஷயங்களை ஒருவன் கடைப்பிடிக்க விரும்பினால் அவன் தன்னிடமுள்ள நல்ல விஷயங்களை ஏற்கெனவே கடைப்பிடிக்கும் ஒருவனாகவே இருக்க வேண்டும்.

16. உலகில் கௌரவமாக வாழ்வதற்கு எளிய குறுக்குவழி எது தெரியுமா..? வேஷம் போடாமல் இயல்பாக இருப்பதுதான்.

17. ஒரு மனிதன் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைத்தான் மற்றவர்களிடம் பரவச் செய்கிறான்.

18. பொய் சொல்லி எவ்வளவு பெரிய ஆதாயம் பெற்றாலும் அந்த வரவுக்கு ஓர் அழிவு தரும் பலன்தான் வட்டியாகக் கிடைக்கும். எப்போதுமே கபடமற்ற வழி முறையே சிறந்தது.

19. நமக்கு எது தேவையோ அதை நாமே சிருஷ்டித்துக் கொள்ள வேண்டும். நமக்கு தேவையானவற்றை அடைய இதுவே சிறந்த வழியாகும்.

20. மனித வாழ்வில் காணப்படும் மிகவும் உன்னதமான நஷ்ட ஈடு எது தெரியுமா.. தனக்கு தானே உதவிக்கொள்ள முடியாத எவனும், மற்றவருக்கு மனப்பூர்வமான முறையில் உதவிட முடியாது.

21. பிறர் உரிமையில் புகுந்து கொண்டு அத்துமீறி நடப்பதற்கு நமக்கு ஒரு போதும் அனுமதி கிடையாது. இதைப் புரிந்து கொண்டே நமது ஆசைகளை திருப்திப்படுத்த வேண்டும்.

22. மகிழ்ச்சி இல்லாமல் வெற்றி என்பது சாத்தியமில்லை. மற்றவருக்கு மகிழ்ச்சி தராமல் யார் ஒருவரும் மகிழ்ச்சியை அடைந்துவிட முடியாது.

23. துன்பப்படும் இதயங்களுக்கு ஒளி பாய்ச்சும்போது வேறு எந்த கபட நோக்கமும் இருத்தலாகாது.

24. நமது முயற்சிகளுக்கான பலன் கிடைக்க கால தாமதம் ஆகலாம் ஆனால் அது ஒரு போதும் கிடைக்காமல் போகாது. ஆகவே முயற்சியுங்கள்.

25. நல்ல காரியங்களுக்கு நல்ல பரிசும் கெட்ட காரியங்களுக்கு தண்டனையும் கிடைப்பதிலிருந்து நாம் தப்ப இயலாது. நாம் ஒற்றுமையான உலகம் ஒன்று அமைவதற்கு சகோதரத்துவத்தை தேர்வு செய்து பயன்படுத்தினால் கண்டிப்பாக சுதந்திர அன்பு என்ற நல்ல கனிகள் கிடைக்கும்.

அலைகள் 10.10.2018

தொடர்ந்தும் வரும்.

Related posts