அமரர் டாக்டர் கனகசுந்தரம் மயிலேறும் பெருமாள் புகழாஞ்சலி

மயிலேறி வந்தவரே சென்ற வழி தெரியாது மயிலேறி சென்றதென்ன..?
விண்ணேற வேண்டிய பலரை தடுத்தவரே நீர்மட்டும் விண்ணேறியதென்ன..?
ஊருண்ணி நீராய் ஊற்றெடுத்தவரே ஒரு சொல்லின்றி ஊர்பிரிந்ததென்ன..?
செய்தி வந்தது சிறகொடிந்தது..!!

உயரமான உதைபந்தாட்ட வீரரே அவசரமாய் ஆட்டம் முடித்ததென்ன..?
சிகரங்கள் பல தொட்ட சேவையாளரே சிரித்தபடி போனதெங்கே..?
அழுதோர் கண்களை துடைத்தவரே அழவைத்து போனதென்ன அருமருந்தே..?
உயிர் கொடுத்தவரே உயிரற்று போனதென்ன..?

சுனாமி வந்த வேளையிலே ஊரைத்தாங்கி ஓயாது உழைத்த உயர்வே..!
அன்னை பார்வதியை ஆதரித்து அனுசரித்து அரிய தொண்டு செய்தவரே..!
குப்பையாய் கிடக்கும் குடா நாட்டில் சுத்தமாய் ஒளிர்ந்த வைத்தியசாலையே..!
வல்வை நிலவே மறைந்ததென்ன..?

பொறி கக்கும் போருக்குள் நெறி கெட்டுபோகாது துணிவுடனே நின்றாய்..!
ஒழுங்கான வைத்தியசாலையென ஒன்றுக்கு பல தடவை பேரெடுத்து தந்தாய்..!
உனக்கு முன்னும் உனக்கும் பின்னும் யாரும் இல்லாது தனித்துவமாய் நின்றாய்..!
சேவலும் மயிலும் நீயின்றிபோயின..!

உனக்கு முன்னே போன வல்வை வீரர் எல்லாம் வானத்தில் வரிசையாய்..!
வாழ்த்தொலி கேட்கிறது வரலாறே அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்..!
வல்வை மாதா உன் பாதங்களில் ஒரு பூவெடுத்து வைக்கிறாள் எடுத்துக்கொள்..!
மயிலேறும் பெருமாளே வணக்கம்..!

ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !

கனடா வாழ் வல்வை மக்கள்

Related posts