நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் கைது

ஆளுநர் மீது அவதூறு செய்தி பரப்பியதாக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால் இன்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி குறித்து தொடர்ந்து நக்கீரன் பத்திரிகையில் செய்திக் கட்டுரைகள் வெளியாகின. இக்கட்டுரைகள் ஆளுநர் மீது அவதூறு செய்திகளைப் பரப்புவதாகவும், ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும் புகார் அளிக்கப்பட்டது.

கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமான நிலையத்திலிருந்து புனே செல்லவிருந்த நக்கீரன் கோபாலை ஒருமணி நேர விசாரணைக்குப் பிறகு, அடையாறு சரக போலீஸார் கைது செய்தனர்.

தற்போது சிந்தாதிரிப்பேட்டை போலீஸார் நக்கீரன் கோபாலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

—————

நக்கீரன் கோபாலைக் கைது செய்திருப்பது பல உண்மைகளை மூடி மறைக்க மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சதி என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக பாலகிருஷ்ணன் இன்று (செவ்வாய்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபாலை இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்தில் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.

—————

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டிருப்பது, பத்திரிகை சுதந்திரத்துக்கு பெரும் ஆபத்து என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “தமிழக ஆளுநர் அலுவலகம் மூலம் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

—————

நக்கீரன் கோபால் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபாலை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”நக்கீரன் குழும இதழ்களின் ஆசிரியர் நக்கீரன் கோபால் சென்னையில் இன்று திடீரென கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னையிலிருந்து புனே செல்லவிருந்த அவரை சென்னை மாநகரக் காவல் துறையினர் விமான நிலையத்தில் வழிமறித்து கைது செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது ஆகும்.

—————–

அதிமுக அரசும், பாசிச பாஜக அரசின் முகவரான ஆளுநரும் தமிழ்நாட்டில் ஒரு அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையை அமல்படுத்தி, பத்திரிகைச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கிறார்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “பொதுநலனில் கொண்டுள்ள அக்கறையினால் பல்வேறு பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து வெளிப்படுத்துவதில் தணியாத ஆர்வமுடன் செயலாற்றிவரும் மூத்த பத்திரிகையாளரும், நக்கீரன் இதழின் ஆசிரியருமான நக்கீரன் கோபாலை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் அதிமுக அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

——————–

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தில் கையெழுத்திடாமல், அதைத் திசை திருப்பவே ஆளுநர் மூலம் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பதாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக வேல்முருகன் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “புனே செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்த நக்கீரன் ஆசிரியர் கோபால் திடீரென கைது செய்யப்பட்டு, அவர் மீது தேசத் துரோக வழக்கு பதியப்பட்டிருக்கிறது. ஆளுநர் கொடுத்த புகாரின் பேரிலேயே கோபால் மீது சட்டவிரோதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

——————-

நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டிருப்பது கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் அரச பயங்கரவாதம் என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலாதேவி குறித்து தொடர்ந்து நக்கீரன் பத்திரிகையில் செய்திக் கட்டுரைகள் வெளியாகின. இக்கட்டுரைகள் ஆளுநர் மீது அவதூறு செய்திகளைப் பரப்புவதாகவும், ஆளுநர் பணியில் தலையிடுவதாகவும் புகார் அளிக்கப்பட்டது.

கிண்டி ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த புகாரின் பேரில் சென்னை விமான நிலையத்திலிருந்து புனே செல்லவிருந்த நக்கீரன் கோபாலை ஒருமணி நேர விசாரணைக்குப் பிறகு, அடையாறு சரக போலீஸார் கைது செய்தனர்.

Related posts