‘தங்கல்’ இயக்குநரின் அடுத்த படம் அறிவிப்பு

தங்கல் இயக்குநரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆமிர் கான் நடிப்பில் வெளியான படம் ‘தங்கல்’. நிதேஷ் திவாரி இயக்கிய இந்தப் படம், கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. குத்துச்சண்டை விளையாட்டில் இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம் வாங்கித்தர வேண்டும் என்ற தன்னுடைய கனவை, தன் மகள் மூலம் நனவாக்கிக் கொள்ளும் தகப்பனைப் பற்றிய கதை இது.

மிகப்பெரிய வசூலைக் குவித்த இந்தப் படம், உலக அளவில் அதிகம் வசூலித்த இந்தியப் படங்களின் வரிசையிலும் இடம்பிடித்தது. இந்தப் படத்துக்குப் பிறகு நிதேஷ் திவாரி இயக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்த படத்துக்கு ‘சிச்சோர்’ என்று தலைப்பு வைத்துள்ளார் நிதேஷ் திவாரி.

‘எம்.எஸ்.தோனி’ படத்தில் தோனியாக நடித்த சுஷந்த் சிங் ராஜ்புத் ஹீரோவாக நடிக்க, ஷ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். இதில் சிறப்பு என்னவென்றால், படத்தில் நடிக்கும் முக்கியக் கதாபாத்திரங்கள் அனைவரின் இளவயது புகைப்படத்துடன், நடுத்தர வயது புகைப்படமும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

அடுத்த வருடம் (2019) ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சஜித் நதியத்வாலா மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.

Related posts