செல்வி. சப்தகி பாலேந்திரனின் பரத நாட்டிய அரங்கேற்றம் நோர்வேயில்

கடந்த சனிக்கிழமை 6ம் திகதி நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவை அண்டியுள்ள லில்லஸ்ரொம் கலையரங்கில் செல்வி சப்தகி பாலேந்திரனின் அரங்கேற்றம் மிகவும் விமரிசையாக நடந்தேறியது.

நித்திய பரத ஜோதி யாழினி பா. பாலேந்திரனின் அரங்கேற்றம் கண்ட மாணவிகளின் வரிசையில் ஒன்பதாவது அரங்கேற்றம் இதுவாகும். மேலும் டென்மார்க்கில் இருந்து நோர்வேக்கு மாறியுள்ள நடன ஆசிரியை நோர்வேயில் நடத்தும் முதலாவது பிரமாண்டமான அரங்கேற்றம் இதுவாகும்.

இந்த நிகழ்விற்கு வாத்திய கலைஞர்கள் உட்பட உலகின் பல பாகங்களில் இருந்தும் பெருந்தொகையான கலைஞர்கள் வருகை தந்திருந்தனர். சிறப்பாக டென்மார்க்கில் இருந்து நூற்றுக்கணக்கானோர் விமான வழியாக வந்தடைந்திருந்தனர்.

அனைவரையும் உரிய முறையில் வரவேற்று யாதொரு தடங்கல் தாமதங்கள் எதுவும் இல்லாமல், சிறந்த நிர்வாக ஒழுங்குடன் நிகழ்வு நடைபெற்றதானது தமிழ் சமுதாயம் மிக வேகமாக முன்னேறி வருவதன் அடையாளமாகவும் இருந்தது.

இப்படியான பாரிய நிகழ்வுகளை எல்லோரும் நடத்த முயலலாம் ஆனால் திட்டமிட்டு குறைகள் இல்லாமல் நேர்த்தியாக செய்வது கடினம். அந்த வகையில் பாலேந்திரன் தம்பதியரின் செயல் நேர்த்தியானது விழாவின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது.

விழாவில் நாம் கண்ட சிறப்புக்கள் சில..

விழா தொடங்கும் நேரம் மாலை 17.00 மணி என்று போடப்பட்டிருந்தது, மண்டபத்தை பார்த்தால் பதினைந்து நிமிடம் முன்னதாகவே மக்கள் வந்துவிட்டார்கள். இந்த பழக்கம் பெரும்பாலான டென்மார்க் விழாக்களில் இல்லை நோர்வேயில் இருந்தது அவர்களுடைய முன்னேற்றத்தையே காட்டியது.

பரத நாட்டிய அரங்கேற்றம் ஆரம்பித்து இடைவேளை விட்டதும் சாப்பாட்டு பெட்டியை பார்த்தாலே போதும் அரங்கில் கூட்டம் கலைந்து பாதி வெற்றிடமாகிவிடும். ஆனால் நோர்வேயில் நிகழ்ச்சி முடியும்வரை மக்கள் அரங்கை விட்டு விலகாமல் கலைக்கு மரியாதை கொடுத்தது அவர்களை பெரிதும் போற்றச் செய்தது.

பல நூற்றுக்கணக்கான வெளிநாட்டு விருந்தினர் வந்தாலும் அயலில் உள்ள தமிழ் மக்கள் குடும்பத்திற்கு இரண்டுபேர் வீதம் தமது வீடுகளில் அழைத்து சென்று பராமரித்தது அவர்களுடைய ஒற்றுமைக்கு இன்னொரு அடையாளமாக இருந்தது.

கலைஞர்கள் சமுதாயத்துடன் சேர்ந்தியங்க வேண்டுமென்பதற்கு அடையாளமாகவும் காணப்பட்டது.

அதேவேளை டென்மார்க்குடன் ஒப்பிட்டால் நோர்வேயில் உள்ள வீடுகள் மிகவும் பெரியதாகவும், விருந்தினரை மனம் கோணாமல் வரவேற்க வசதியாகவும் இருந்ததும், மக்கள் செழிப்புடன் வாழ்வதும் விழாவின் வெற்றிக்கு இன்னொரு காரணமானது.

மேலும் அரங்கேற்றத்தில் இதுவரை எங்கும் காணாத சிறப்பம்சம் ஒன்றும் சேர்க்கப்பட்டிருந்தது. மேடையில் உள்ள அகன்ற திரையில் அரங்கேற்ற நாயகியான சப்தகியே தனது நடனங்களை விபரிக்கும் காணொளி காண்பிக்கப்பட்டது புதுமையாக இருந்தது. வரும் காலங்களில் இது மற்றைய நாடுகளின் மேடைகளிலும் கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒன்றாக இருந்தது.

நடன அரங்கேற்றத்தில் தேர்வு செய்யப்பட்ட நடனங்கள் அனைத்துமே கடுமையான நடனங்களாகவே இருந்தன. வழங்கும் நடனங்களை சவாலாகவும், தரம் கூடியதாகவும் வழங்க வேண்டும் என்ற ஆசிரியையின் முயற்சி எங்கும் தெரிந்தது.

பாடல்களின் பொருள் உணர்ந்து, கதை உணர்ந்து, அதற்கு எவ்வாறான பாவனை காட்ட வேண்டும், அதற்கான உடல் மொழி என்ன, ரிதம் என்ன வேக அளவுதான் யாதென சப்தகி புரிந்த அளவு பாராட்டுக்களை குவித்தது.

நடனங்களில் தரங்கம் என்பது ஒரு விஷப்பரீட்சை போன்றது. அரங்கேற்றத்தில் இந்த குச்சுப்பிடி நடன வடிவத்தை பொதுவாக பலர் கையில் எடுப்பதில்லை. ஒரு வேளை தலையில் ஏந்திய தீபச் செம்பு கீழே விழுந்துவிட்டால் மக்கள் அதை மட்டுமே பேசுவார்கள். ஆனால் நடன ஆசிரியையோ கடுகளவும் பின்வாங்காமல் அதை முன்னெடுத்தார். சப்தகி வெற்றியாகவும் நிறைவு செய்தார். அதன் பின் அவருடைய வெற்றிக்கு தடைகள் எதுவும் இருக்கவில்லை.

பிட்டுக்கு மண் சுமந்த கதை கொண்ட நவரச வர்ணம், பாம்பு நடனம் போன்றன பெரிதும் கவனத்தை தொட்ட நடனங்களாகும்.

நடன ஆசிரியை யாழினி பா. பாலேந்திரன் வழமையாக ஆடை அலங்காரம், நடனங்களில் வித்தியாசம், கடின உழைப்பு போன்றவற்றால் தன்னை மற்றவரில் இருந்து வேறுபடுத்தி அடையாளம் காட்டியவர். இப்போது அவர் நோர்வே சென்றுள்ளதால் அங்கிருக்கும் பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலம் ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியவில்லை.

நோர்வே பாடகர் ஹரிகரன் சுயம்பு, டென்மார்க் பாடகி மேகவி பத்மசேகரன், மிருதங்கம் பெங்களுர் பிரதாப் ராமச்சந்திரா, வயலின் நெய்வேலி ராதா கிருஷ்ணன், புல்லாங்குழல் பிரவீன் பிரதாபன், தம்புரா ஐஸா குணாளன், நர்த்தகி பாலேந்திரன் ஆகியோர் பங்கேற்று மெருகூட்டினர்.

நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக தாயகத்தில் இருந்து நடன ஆசிரியை சாந்தினி சிவநேசனும், சிறப்பு விருந்தினராக மாலா சத்தியமூர்த்தி, ஆசிரியர் கி.செ.துரை ஆகியோர் பங்கேற்றனர். டென்மார்க் நடன ஆசிரியை திருமதி சுமித்திரா சுகேந்திரா சிறப்பாக பங்கேற்று முக்கிய உரையாற்றினார்.

நோர்வேயின் பல்வேறு சமூக அமைப்புக்களும் பாராட்டு மடல்களை வழங்கின. நிறைவாக நன்றியுரையில் சப்தகி தமிழில் பேசி அசத்தியதோடு தனது தமிழ் வளர்ச்சிக்கு துணை புரிந்த அம்மம்மாவான திருமதி பால்ராஜ் அவர்களையும் பாராட்டினார்.

அவருடைய தகவலானது தொடர் நாடகம் பார்க்காமல் அம்மம்மாவும், அப்பம்மாவும் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லி கொடுக்க வேண்டும் என்ற உண்மையை பறைசாற்றியது.

பாடகர் ஹரிகரன் சிறப்பாக பாடல்களை வழங்கினார், கூடவே மேகவி பாடிய பாடல்கள் பெண் குரல் ஒன்றின் பற்றாக்குறையை நிறைவு செய்தது. இதுபோல வளரும் கலைஞர்களை அரங்கில் பாட வைப்பது மிகமிக முக்கியமான பணியாகும்.

பெரும் பொருட் செலவில், மகத்தான காரியமொன்றை நிறைவேற்றிய பாலேந்திரன், யாழினி தம்பதியர், குடும்பத்தினர், அரியாலை மக்கள், நோர்வே தமிழ் உறவுகள், டென்மார்க் கலைஞர்கள், உறவுகள், ஒலியமைப்பை நேர்த்தியாக செய்த கிருஷ்ணா கந்தசாமி என்று பல தரப்பினரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

கவிஞர் சோதியா தனது அழகிய தமிழில் தொகுத்தளித்தது, கார்மேகம் நந்தா கவி படித்தது யாவும் சிறப்பே.

பரதக்கலையை அது பிறந்த இந்தியாவைவிட இலங்கை மக்களே உலகம் முழுதும் பரப்பினார்கள் என்ற பெருமையை இனியும் திரை போட்டு மறைக்க முடியதன்றோ..?

அது பிழை அட இது பிழை என்று எதுவுமே செய்யாது பிலாக்கணம் பாடும் கூட்டம் பார்த்து திருந்த வேண்டிய நிகழ்வு இது.

எதற்குமே லாயக்கில்லாமல் வாழ்வதைவிட சமுதாயத்திற்கு நம்பிக்கை தரும் செயல்களை செய்வோரை போற்றுவோம் என்ற மக்கள் போக்கு நோர்வேயில் சிறப்பாக இருந்தது.

அலைகள் 09.10.2018

Related posts