கருணாகரனுடன் ரசிகர்கள் மோதல்

நகைச்சுவை நடிகர் கருணாகரனுடன் விஜய் ரசிகர்கள் மோதல் சமூக வலைத்தளத்தை பரபரப்பாக்கி வருகிறது.

நடிகர் விஜய் ‘சர்கார்’ பட விழாவில் பேசும்போது, ‘‘நான் முதல்–அமைச்சர் ஆனால் உண்மையாக இருப்பேன். லஞ்சம் ஊழலை ஒழிப்பேன்’’ என்று கூறினார். அதோடு ஒரு குட்டி கதையையும் சொன்னார். விஜய் பேச்சு பற்றி கருத்துக் கூறிய நகைச்சுவை நடிகர் கருணாகரன், ‘‘அரசியல்வாதிகளுக்காக சொல்லப்பட்ட அந்த கதை அரசியல்வாதிகளுக்கு மட்டும்தானா? அல்லது நடிகர்களுக்கும் பொருந்துமா? தகாத வார்த்தைகளில் பேச வேண்டாம் என்று ரசிகர்களிடம் சொல்லிப்பாருங்கள் அவர்கள் கேட்கிறார்களா? என்று பார்ப்போம்’’ என்று சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டார்.

இதற்கு விஜய் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கருணாகரன் ஆந்திராக்காரர் என்றும் விமர்சிக்கப்பட்டன. இதற்கு பதில் அளித்த கருணாகரன் நான் ரெட் ஹில்ஸ் அருகில் உள்ள பாடியநல்லூரில் பிறந்தேன். நான் தமிழகத்தை சேர்ந்தவனா? என்று முட்டாள்தனமாக கேள்வி கேட்க வேண்டாம். ‘சர்கார்’ தமிழ் தலைப்பா? என்று நான் எப்போதாவது கேட்டேனா? என்று இன்னொரு பதிவையும் வெளியிட்டார்.

கருணாகரன் கருத்துகளால் மேலும் ஆத்திரமான விஜய் ரசிகர்கள் அவரை சரமாரியாக கண்டித்து பதிவிட்டு வருகிறார்கள். தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் கமி‌ஷனர் ஆபீசில் புகார் செய்யப்போவதாகவும் கருணாகரன் அறிவித்து உள்ளார். இவர்கள் மோதல் சமூக வலைத்தளத்தை பரபரப்பாக்கி வருகிறது.

Related posts