ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் இயக்குநர் மகேந்திரன்

ரஜினி நடித்துவரும் ‘பேட்ட’ படத்தில், இயக்குநர் மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

‘2.0’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கும் முதல் ரஜினி படம் இது.

ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், சசிகுமார், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

ஊட்டியை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தின் ஷூட்டிங், டேராடூன், டார்ஜிலிங், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து லடாக், ஐரோப்பா ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. ஹாஸ்டல் வார்டனாக இந்தப் படத்தில் நடிக்கிறார் ரஜினி.

தற்போது வாரணாசியில் ரஜினி, த்ரிஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்தப் படத்தில் இயக்குநர் மகேந்திரனும் நடிக்க இருக்கிறார். ‘தெறி’ படத்தில் வில்லனாக நடித்த மகேந்திரன், தொடர்ந்து ‘நிமிர்’, ‘மிஸ்டர் சந்திரமெளலி’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

ரஜினியை வைத்து ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’ படங்களை இயக்கியவர் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts