சூர்யா படத்தில் பிரதமராக மோகன்லால்

செல்வராகவன் இயக்கிய ‘என்.ஜி.கே’ படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். இப்போது கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே அயன், மாற்றான் படங்கள் வெளிவந்தன.

கே.வி.ஆனந்த் இயக்கும் படத்துக்கு இன்னும் பெயர் வைக்காமலேயே படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதில் சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா, சிராஜ் ஜானி, சாயிஷா, சமுத்திரக்கனி ஆகியோரும் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தின் கதை மற்றும் கதாபாத்திரங்களை அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டினார்கள். இந்த நிலையில் மோகன்லால் பிரதமராக நடிப்பதாகவும் அவருக்கு பாதுகாப்பு அதிகாரியாக சூர்யா வருகிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மோகன்லால் பிரதமர் தோற்றத்தில் இருப்பதுபோன்ற படமும் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்தி வாசகங்களுடன் மோகன்லால் பிரதமர் வேடத்தில் இருக்கும் பேனர் மற்றும் அதன் அருகில் சூர்யா கோட் சூட்டில் மிடுக்காக நடந்து செல்வது போன்ற இன்னொரு படமும் வெளியாகி இருக்கிறது.

பிரதமருக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை சூர்யா முறியடிப்பது போன்று திரைக்கதை அமைத்து இருப்பதாக கூறுகின்றனர். ஆனாலும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. அரசியல் திகில் படமாக தயாராகிறது. இது சூர்யாவுக்கு 37–வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts