விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்ப ரஷ்யா உதவி புரியும்

ரஷ்யாவின் நீண்ட கால நட்பு நாடாக இந்தியா திகழ்கிறது.விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்ப ரஷ்யா உதவி புரியும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறி உள்ளார்.

இந்தியாவின் நீண்ட கால மற்றும் நெருங்கிய நட்பு நாடுகளில், ரஷியாவுக்கு சிறப்பிடம் உண்டு. இந்த உறவை வலுப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் இந்தியா-ரஷியா உச்சி மாநாடு நடந்து வருகிறது. அந்த வரிசையில் 19-வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.இதில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார். உயர் மட்டக்குழுவினருடன் இந்தியா வந்துள்ள புதின், இன்று பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, இருநாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கப்படலாம் என தெரிகிறது. அதேபோல், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தடைகள் குறித்தும், மோடியும், புதினும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தைக்கு இடையே, ரஷ்யாவிடம் இருந்து எஸ் -400 ரக ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.36 ஆயிரம் கோடி) மதிப்பிலான இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் எச்சரிக்கைய மீறி கையெழுத்தாகியுள்ளது.

இந்த சந்திப்புக்கு பிறகு இருநாட்டு உயரதிகாரிகள் மட்டத்திலான சந்திப்பு நடைபெற்றது, அப்போது ராணுவம் மற்றும் விண்வெளி சார்ந்த துறைகளில் சுமார் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் மோடியும் புதினும் இணைந்து கூட்டாக பேட்டி அளித்தனர்

பின்னர் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

இந்தியா வளர்ச்சி பாதையில் செல்ல ரஷ்யா உதவியுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ரஷ்யாவும், இந்தியாவும் பரஸ்பரம் பலன் அடைந்துள்ளன. தீவிரவாதத்திற்கு எதிரான போரில் சர்வதேச நாடுகளுடன் இணைந்து பங்கேற்பது என்றும் உறுதியேற்றுள்ளோம் – என கூறினார்.

ரஷ்ய அதிபர் புதின் கூறியதாவது:-

நான் சிரியாவில் நிலைமை குறித்து பிரதமரிடம் தெரிவித்தேன். ஈரான் உடன்படிக்கையிலிருந்து திரும்பப் பெற அமெரிக்க எடுத்த நடவடிக்கை விளைவாக ஏற்பட்ட நிலைமை குறித்து நாங்கள் விவாதித்தோம். ரஷ்யாவின் நீண்ட கால நட்பு நாடாக இந்தியா திகழ்கிறது. விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்ப ரஷ்யா உதவி புரியும் என கூறினார்

Related posts