ரியூப் தமிழ் யாழ். காரியாலயத்தின் மீது கொலை முயற்சி கோடரி, வாள் வெட்டு தாக்குதல்

கொலை முயற்சியில் ஈடுபட்ட சந்தேக நபர் யார்..?

அவரின் பின்னால் இருந்து இயக்கிய சூத்திரதாரிகளின் நோக்கமென்ன..?

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்திருக்கும் ரியூப்தமிழ் எப்.எம் காரியாலயத்தின் மீது நேற்று நள்ளிரவு இரண்டு மணியளவில் ஆயுதம் தாங்கிய நபர்கள் தாக்குதல்.

வாள் கோடரியுடன் வந்த இரண்டு நபர்கள் கைவரிசை.

வாயிலில் நின்ற மேட்டார் சைக்கிள் ஒன்றின் மீது சரமாரி தாக்குதல் ஊழியர்கள் சிதறி ஓட்டம்..

யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக நேற்று முன்தினம் வடக்கு மாகாணத்தின் பிரதிப்போலீஸ்மா அதிபர் ரொசான் பெர்ணாண்டோ கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.

அவருடைய குரல் ஊடகங்களின் பதிவில் இருந்து நீக்கப்பட முன்னர் போலீஸ் திணைக்களத்திற்கு சவால் விடுவது போல இந்தக் காரியம் அரங்கேறியிருக்கிறது.

இது தனி மனித தாக்குதல் என்றால் அதை பிரத்தியேகமான ஒரு கோணத்தில் பார்க்கலாம் ஆனால் ஊடகம் ஒன்றின் மீது குறி வைத்து தாக்கப்பட்டதோடு, கொலை நோக்கமும் இருந்திருப்பதே இதில் உள்ள சவாலும் பேரபாயமும் ஆகும்.

வழமையாக நடக்கும் ஆவா குழுவின் தாக்குதல் போல இது அமைந்திருக்கவில்லை என்பதை காணொளி காட்டுகிறது.

ஆகவே யாழ்ப்பாணத்தில் புதியதோர் வன்முறைக் குழு உருவாகியிருப்பதை இந்தத் தாக்குதல் காட்டுவதாக பலர் கூறுகிறார்கள்.

மேலும் இந்தத் தாக்குதலானது பின்வரும் கேள்விகளை சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்தியிருக்கிறது.

வடக்கு மாகாண அரசோ இலங்கையில் உள்ள மக்களுக்கு தொழில் வாய்புக்களை ஏற்படுத்த வேண்டுமென கேட்கிறது. வடக்கு மாகாண ஆளுநரோ வடக்கில் உள்ள பெரிய பிரச்சனை தொழில் இன்மை என்கிறார். அதை புலம் பெயர் நாடுகளே ஏற்படுத்த வேண்டும் என்கிறார். ஆனால் இப்படி வாளையும் கோடரியையும் வீசுவோரை கட்டுப்படுத்தாமல் எப்படி முதலிடுவது.. எவ்வாறு தொழில்களை மேம்படுத்துவது.. வடக்கு மகாண அரசின் முன் நிற்கும் கேள்வியாகவே இது இருக்கிறது.

மேலும் இந்த செயலானது வெளி நாட்டு முதலீட்டாளர்களுக்கு பலத்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கொலை முயற்சிக் குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்பட்டு, அவர்கள் நோக்கம் கண்டறியப்பட வேண்டியது அவசியமாகிறது.

ஒரு கையில் கோடரி, அடுத்த கையில் வாள் இரண்டுடனும் கொலை முயற்சி சந்தேக நபர் பாய்ந்து வருவது நிறுவனத்தின் கமேராவில் பதிவாகியிருக்கிறது.

அவர் வேகமாக வருவது கண்டு விரைவாகவே கதவை பூட்டிக்கொண்டதால் இரவு நேர பணியாளர் மயிரிழையில் தப்பித்துள்ளனர்.

01. கொலை முயற்சி.. 02. சொத்து அழிப்பு.. 03. வெளிநாட்டு முதலீடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி நாட்டை நெருக்கடியில் தள்ளும் நீண்ட கால நோக்கம் 04. மக்களை பீதியில் வைத்திருத்தல் 05. ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் 06. சமுதாய அமைதிக்கு பங்கம் விளைவித்தல் போன்ற ஆறு முக்கிய தலைப்புக்களில் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட வேண்டிய வாய்ப்புக்கள் பலமாக இருக்கிறது.

அதற்கு சந்தேக நபர்கள் அனைவரும் முதலில் கைது செய்யப்பட வேண்டும்.

மேலும் இதில் கவலை தரும் விடயம் என்னவென்றால்..

வடக்கில் யாதொரு இலாப நோக்கும் இன்றி வேலை வாய்ப்பின்றி இருக்கும் இளையோருக்கு வேலை வாய்ப்பை வழங்கி சமுதாய மேம்பாட்டுக்கு பாடுபடும் ரியூப் தமிழ் நிறுவனத்தின் பணிகளை முடக்க வேண்டிய தேவை என்ன..?

இதற்கு பின்னால் நிற்போரின் அடிப்படை நோக்கமென்ன..?

துடிக்கின்றன கேள்விகள்.

அதேவேளை போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள் என்று யாழ் செய்திகள் கூறுகின்றன.

இலங்கையின் முக்கியமான ஊடகங்களில் எல்லாம் இன்று இந்தச் செய்தி வெளியாகியிருக்கிறது.

அதேவேளை.. சர்வதேச முதலீட்டு பகுதியில் இருந்து..

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடைய கவனத்திற்கும் இந்த விவகாரம் எடுத்துச் செல்லப்பட வேண்டுமென புலம் பெயர் நாடுகளில் உள்ள இலங்கைக்கான முதலீட்டாளர்கள் பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஏனென்றால்..

இந்தச் சம்பவமானது..

சிறிய பணத்தொகை, போதை வஸ்த்து போன்றன கொடுத்து சிறு சிறு குழுக்களை ஏவிவிடும் புதிய கலாச்சாரம் யாழில் ஆரம்பிக்க தூண்டுதலை வழங்குவதாக இருக்கிறது.

அப்படி நடந்து சட்டம் ஒழுங்கு குலையுமாக இருந்தால் இலங்கை அரசின் அனைத்து திட்டங்களும் அடி வாங்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

விலகுமா கரு முகில்கள்..?

விடியுமா வடக்கு மக்களின் வாழ்வில் விழுந்த வன்முறை இருள்..

எந்த குற்றச் செயல் நிகழ்ந்தாலும் வடக்கு மக்கள் கருத்து சொல்லாமல் உறைந்த மௌனம் காப்பது ஏன்..?

வாயை திறந்தால் நாளைக்கு கோடரியும், வாளும் வருமென்ற பீதியில் நாம் வாழ்கிறோமென சமீபத்தில் யாழ். பல்கலைக்கழக முக்கிய பணியாளர் ஒருவர் எம்மிடம் கூறியிருந்ததையும் இப்போது நினைத்துப் பார்க்கிறோம்.

அலைகள் 07.10.2018 ஞாயிறு

Related posts