அடுத்த மாகாண சபையாவது மக்களது எதிர்பார்ப்பை..?

அடுத்து வரும் மாகாணசபை சிறுபான்மையினர் தமது உரிமைகளை பெற்று ஏனைய சமூகத்தவர்களை போல சம அந்தஸ்துடன் வாழக் கூடியவகையில் அமைய வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்

அடுத்த மாகாண சபை மக்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அமைவதற்கான ஏற்பாட்டை எமது வாக்காளர்களே செய்ய வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

தற்போதைய மாகாண சபையின் காலம் முடிவடைகிறது. அடுத்த மாகாண சபையாவது மக்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அமைய வேண்டும். 13 ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்டதே தமிழ் மக்கள் ஏனைய சமூகத்தைப் போன்று வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் அச்சுவேலி புனித தெரேசா மகளிர் கல்லூரியில் ‘அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கட்டிடத் தொகுதி ஆரம்பப் பிரிவு, கற்றல் வள நிலையம் ஆகியன நேற்று (28) திறந்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், எமது நாட்டில் 13 வது திருத்தம் முக்கியமாக கொண்டுவரப்பட்டது வடக்கு, கிழக்கை மையப்படுத்தியே என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். எனவே அதன் உச்ச பயனை நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். நான் இங்கு அரசியல் பேச விரும்பவில்லை, ஆனாலும் அடுத்த மாகாண சபையை நீங்கள் வாக்களித்து தெரிவு செய்கின்ற பொழுது சிறப்பாக செயற்படக் கூடிய ஒரு மாகாண சபையை தெரிவு செய்ய வேண்டும்.அதற்கு காரணம், வட மாகாணத்தில் மொத்தமாக 1,010 பாடசாலைகள் இருக்கின்றன. அதில் 22 பாடசாலைகள் தேசிய பாடசாலைகள் மீதமுள்ள 988 பாடசாலைகளும் மாகாண பாடசாலைகளாகவே இருக்கின்றன.எனவே அவற்றை அபிவிருத்தி செய்ய வேண்டிய பொறுப்பு மாகாண சபைக்கே இருக்கின்றது.

தனியே தேசிய பாடசாலைகள் மாத்திரம் அபிவிருத்தி செய்யப்படுவது என்பதைவிட அனைத்து பாடசாலைகளும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதி, பிரதமர் கல்வி அமைச்சர் மற்றும் என்னுடைய எதிர்பார்ப்பாகும். அதன் காரணமாகவே கல்வி அமைச்சு, ‘அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதனை நடைமுறைபடுத்தி வருகின்றோம்.

எனவே அடுத்ததாக வட மாகாணத்தில் அமைய இருக்கின்ற மாகாண சபை சிறந்த ஒரு சபையாக அமைய வேண்டும்.அப்படி இருந்தால்தான் இங்கிருக்கின்ற மக்களுக்கு அதனுடைய பலன்கள் வந்து சேரும். தனியே உரிமைகளைப்பற்றி மாத்திரம் குரல் கொடுக்காது மக்களுடைய அபிவிருத்தியையும் கருத்தில் கொண்டு செயற்படுவதே சிறந்ததாக இருக்கும் என நான் நினைக்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிகழ்வில் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்பணி பி.ஜே.ஜெபரட்ணம்,கொழும்பு இந்து குருமார் அமைப்பின் தலைவர் சிவஸ்ரீ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். நிகழ்வுகள் அனைத்தும் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி மரிய ஜீவந்தி தலைமையில் நடைபெற்றது.

Related posts