பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்

பரியேறும் பெருமாள்’ தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல். தமிழ் சினிமாவில் நிகழ்ந்துள்ள ஓர் அற்புதம் என்று எழுத்தாளர் சாரு நிவேதிதா கூறியுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் நாளை (செப்டம்பர் 28) ரிலீஸாக இருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. கதிர் – ஆனந்தி ஜோடியாக நடித்துள்ள இந்தப் படத்தில், யோகி பாபு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

திருநெல்வேலி சுற்று வட்டாரப் பகுதியை சார்ந்த ஒரு கிராமத்து இளைஞனின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை அடிப்படையாக கொண்டு இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

பரியேறும் பெருமாள் படம் நாளை ரிலீஸாக உள்ள நிலையில், பல்வேறு பிரபலங்களுக்காக படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இந்நிலையில் இப்படம் குறித்து எழுத்தாளர் சாரு நிவேதிதா முகநூலில் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

”பரியேறும் பெருமாள் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல். தமிழ் சினிமாவில் நிகழ்ந்துள்ள ஓர் அற்புதம். சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் கதை சொல்லும் முதல் தமிழ்ப் படம். தலித் அழகியலை முன்வைக்கும் முதல் படமும் கூட. ஆனால் பிரச்சாரம் இல்லை. கலைப் படம் என்ற பாவனை இல்லை. ஒரு நொடி கூட அலுப்புத் தட்டவில்லை. ஒரு அற்புதமான உலகத் தரமான படம் பார்த்த திருப்தியைத் தந்தது பரியேறும் பெருமாள். இயக்குனர் மாரி செல்வராராஜ். உனக்கு என் அன்பான முத்தங்கள்” என்று சாரு நிவேதிதா தெரிவித்துள்ளார்.

Related posts