துருக்கிய அதிபர் இன்று ஜேர்மனி விஜயம் ஐரோப்பாவிலேயே பெரிய பள்ளிவாசல் திறப்பு..!

துருக்கிய அதிபர் தையிப் எர்டோகன் மூன்று தினங்கள் கொண்ட அரச முறை விஜயமாக இன்று ஜேர்மனியின் தலைநகர் பேர்ளினை சென்றடைகிறார்.

வரும் சனிக்கிழமை ஜேர்மனியில் இருக்கும் கேள்ண் என்ற நகரத்தில் கட்டப்பட்டுள்ள ஐரோப்பாவிலேயே மிகவும் பெரிய பள்ளிவாசலை அவர் திறந்து வைக்க இருக்கிறார்.

17.000 சதுர மீட்டர் பரப்பளவுள்ள 1200 பேர் தொழுகை செய்யக்கூடிய மசூதி இதுவாகும். துருக்கிய இஸ்லாமிய யூனியன் இந்த மசூதியை எட்டு வருடங்களாக கட்டி வருகிறது.

600 பேர் இருக்கக் கூடிய மாநாட்டு மண்டபம், நூல் நிலையம், கடைத்தொகுதி, நிலத்தடியில் கார் தரிப்பிடமென்று சகல வசதிகளுடனும் அமைவு பெற்றுள்ளது.

ஜேர்மனியில் சுமார் மூன்று மில்லியன் வரை துருக்கிய மக்கள் இருப்பதால் இப்படியொரு பள்ளிவாசல் அவர்களுக்கு அவசியமாகிறது.

ஆனால் இஸ்லாமியர்களுக்கும் ஜேர்மனிய அடிப்படைவாத கட்சிகளுக்குமிடையே கடந்த காலங்களில் பலத்த முறுகல் வெடித்து ஆர்பாட்டங்கள் பொறிகக்கி வருகின்றன.

இந்த நிலையில் துருக்கிய அதிபரை வவேற்பதா இல்லையா என்ற தடுமாற்றம் ஜேர்மனிய சான்சிலர் ஏஞ்சலா மேர்க்கலுக்கு இயல்பாகவே இருக்கும்.

ஜேர்மன் வரும் துருக்கிய அதிபர் ஜேர்மனிய அதிபர் பிராங் வோல்ரர் ஸ்ரெயின்மானையும் சாஞ்சிலர் ஏஞ்சலா மேர்க்கலையும் சந்தித்து உரையாட இருக்கிறார்.

அத்தருணம் அவர் பழைய பகைகளை மறந்து புதிய உறவை ஏற்படுத்த விரும்புவதாக தெரிவிப்பார்.

ஜேர்மனிக்கும் துருக்கிக்கும் இடையே கடந்த ஆண்டு முறுகல் உச்சகட்டமடைந்தது. காரணம் துருக்கியில் அதிபர் தேர்தல் நடைபெற்ற போது துருக்கிய மந்திரிகள் ஜேர்மனிக்குள் வந்து அதிபருபக்கு சாதாகமாக பிரச்சாரம் செய்ய முயன்றனர் அப்போது தனது நாட்டுக்குள் துருக்கியின் அரசியல் பிரச்சாரம் தேவையில்லை என்று ஜேர்மனி தடுத்துவிட்டது.

அதைத் தொடர்ந்து வெகுண்டெழுந்த துருக்கிய அதிபர் ஜேர்மனியின் இன்றைய ஆட்சியாளர் முன்னைய ஹிட்லர் காலத்து நாஜிகளை விட மோசமானவர்கள் என்று வசைபாடினார்.

பின்னர் ஜேர்மனிய உதைபந்தாட்ட அணிக்கு விளையாடும் துருக்கியை பின்னணியாகக் கொண்ட மிசூற் ஊசில் என்ற துருக்கிய அதிபருக்கு தனது 11ம் இலக்க சீருடையை கொடுத்து புகைப்படம் எடுக்க அதற்கு ஜேர்மனியில் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. துவேஷம் என்று கூறி மிசூற் ஊசில் அந்த அணியில் இருந்தே விலகினார்.

இப்படி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இரு நாடுகளுக்கும் இடையே உருவான பகையை மூன்று நாட்களில் ஒழித்து புதிய தேனிலவு கொண்டாட முடியுமா..?

இதுதான் கேள்வி..

இப்போது துருக்கியின் நாணயம் அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகள் காரணமாக 40 வீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

துருக்கி பிடித்து டிவைத்துள்ள அமெரிக்கப் பாதிரியாரை விடுதலை செய்து அமெரிக்காவிற்கு பணிந்து போகாவிட்டால் டொனால்ட் ரம்பின் கோபம் மேலும் பெருகும்.

இந்த இக்கட்டான நிலையில் ஜேர்மனிய சான்சிலர் அமெரிக்காவை பகைத்து துருக்கியுடன் உறவாடுவது அவருக்கு மேலும் தலை வலிகளை ஏற்படுத்தும். இதனால் அவர் துருக்கிய அதிபருடன் உடனடியாக பேசவில்லை.

எவ்வாறாயினும் ஐரோப்பாவில் பலமான பொருளாதாரமுள்ள ஜேர்மனியுடன் உறவை பலப்படுத்தாவிட்டால் இப்போதைய இருட் குகைக்குள் இருந்து துருக்கியால் வெளியேற முடியாது.

ஜேர்மனி அவருடைய கைகளை பற்றி தற்போதய குருண்மை நிலையில் இருந்து அவரை மீட்டு வெளிச்சத்தில் விடுமா என்பதற்கு உத்தரவாதமில்லை.

வெளி நாடுகளில் மசூதிகளை கட்டுவதும் துருக்கியில் இருந்து இமாம்களை அனுப்புவதும், அவர்கள் மூலமாக தனது எதிரிகள் யாரென்று துப்பறிவதும் எர்டோகனின் வேலை என்று பல துருக்கியர் கூறியிருக்கிறார்கள்.

ஆகவே ஜேர்மனிய சான்சிலர் முள்ளில் போட்ட சேலையை எடுப்பது போல கவனமாக செயற்பட வேண்டியிருக்கிறது. தவறினால் உள்நாட்டில் பலத்த சிக்கல் ஏற்படும்.

இதற்கிடையில் துருக்கிய அதிபர் நடத்தும் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக ஜேர்மனியில் பலமான ஆர்பாட்டங்கள் நடக்க இருக்கின்றன.

அலைகள் 27.09.2018 வியாழன்

Related posts