ஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி: துப்பு கொடுத்தால் ஒரு லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசு

ஆஸ்திரேலியாவில் அண்மையில் ஸ்ட்ராபெரி பழத்தினுள் ஊசி இருந்ததாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து நாடு முழுவதும் அச்சம் ஏற்பட்டது எனவே அது குறித்து விசாரணை நடத்த அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

சவுத் வேல்ஸ், கியுன்ஸ்டான்ட் மற்றும் விக்டோரியா மாகாணங்களில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் விற்கப்பட்ட ஸ்ட்ராபெரி பழங்களில் ஊசி இருந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

ஸ்ட்ராபெரி பழங்களை வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியிருந்தனர்.

அவ்வாறு ஊசி இருந்த ஒரு பழத்தை உண்ட ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், ஊசி இருந்த பழத்தை ஒன்பது வயது சிறுவன் ஒருவனும் உண்டிருந்தாலும், அவன் ஊசியை விழுங்கவில்லை.

தனது நண்பர் ஒருவர் ஊசி ஏற்றப்பட்டிருந்த பழத்தை உண்டதால் கடுமையான வயிற்று வலியில் துடித்ததாக, ஜோஷ்வா என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.

இதுபோன்ற பல தகவல்கள் வெளியானதை அடுத்து பல்வேறு பிராண்டு ஸ்ட்ராபெரிகள் சந்தையில் இருந்து திரும்பப் பெறப்பட்டன. நியூசிலாந்தின் மிகப்பெரிய வணிக நிறுவனம் ஒன்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆஸ்திரேலிய ஸ்ட்ராபெரி பழங்களை விற்பனை செய்வதை நிறுத்திவிட்டது.

இந்த விசயத்தில் துப்பு கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசுத்தொகையை குயின்ஸ்லாண்ட் மாகாண அரசு அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஆஸ்திரேலிய உணவுத்துறை அமைச்சர் கிரெக் ஹண்ட் உத்தரவிட்டிருக்கிறார்.

“இது மிகவும் மோசமான குற்றம் என்றும், இது பொதுமக்கள் மீதான தாக்குதல்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Related posts