ட்ரம்ப்பை ஆச்சரியப்படுத்திய வடகொரியா

வடகொரியாவின் ராணுவ அணிவகுப்பில் அணு ஆயுதங்கள் இடம்பெறாமல் இருந்ததற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வடகொரியா தனது நாட்டின் 70-வது ஆண்டு விழாவை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடியது. இதில் அந்நாட்டின் ராணுவ சக்தியைக் காட்டும் சக்தி வாய்ந்த வாகனங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆனால் இதற்கு முன்னர் வடகொரியா நடத்திய சக்தி வாய்ந்த ராணுவ அணிவகுப்பில் உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் அந்நாட்டின் அணு ஆயுதங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த அணிவகுப்புல் அணு ஆயுதங்கள் இல்லாமல் வடகொரியா ராணுவ அணிவகுப்பை நடத்தியுள்ளது.

வடகொரியாவின் இந்த நகர்வுதான் அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வடகொரியாவின் இந்தச் செயலுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “வடகொரியாவின் 70-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடந்த ராணுவ அணிவகுப்பில் அணு ஆயுதங்கள் ஏதும் இடம் பெறவில்லை.

இது வடகொரியாவிடமிருந்து வந்துள்ள சாதகமான நடவடிக்கையாகும். வடகொரிய அதிபர் கிம்முக்கு நன்றிகள். நாம் இருவரும் இணைந்து நம்மைப் பற்றிய அனைவரின் தவறான கருத்தை நிரூபித்து இருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

வடகொரியாவும், அணு ஆயுத சோதனைகளும்

முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன.

வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால், எதிர்ப்புகளை சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.

இந்த நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா – தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் – கிம் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு ஏற்பட்டது.

இந்தச் சந்திப்பில் அணுஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது.இதன்பின்னர் ட்ரம்ப்புக்கும், கிம்முக்கும் மோதல் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் இவற்றுக்கெல்லாம் வடகொரியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Related posts