மெக்சிகோவில் கண்டெடுக்கப்பட்ட 166 உடல்கள்

மெக்சிகோவின் வெராகர்ஸ் மாகாணத்தின் கிழக்குப் பகுதியில் 166 உடல்கள் குவியலாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மெக்சிகோ போலீஸ் சார்பில், ‘‘உடல்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தை தற்போது பாதுகாப்பு காரணங்கள் கருதி எங்களால் கூற முடியாது. போதை பொருட்கள் கடத்துவதற்கு பல வருடங்களாக வெராகர்ஸ் மாகாணம் கடத்தல்காரர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு 250 மண்டை ஓடுகள் இந்தப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. உடல்கள் கைப்பற்றப்பட்டது குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.

கண்டெடுக்கப்பட்ட உடல்களுடன், ஏராளமான ஆடைகளும், அடையாள அட்டைகளும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக மெக்சிகோ ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெக்சிகோவை பொறுத்தவரை அங்கு போதை பொருட்கள் கடத்தல் அதிகளவு நடைபெறுகிறது. இதன் காரணமாக அங்கு எழும் தொழில் போட்டிக் காரணமாக அங்கு கொலைகள் அதிகளவில் நடத்தப்படுகிறது.

கடந்த 2006 முதல் இதுவரை 2 லட்சம் பேர் இதுவரை போதை பொருட்கள் கடத்தல் காரணமாக கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வருடம் மட்டுமே 28, 702 பேர் கொல்லப்பட்டனர், 37,000 மாயமாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது.

மெக்சிகோவிலிருந்து போதை பொருட்கள் அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக கடத்தப்படுவதை தவிர்க்கவே சுமார் 670 மைல் தொலைவுக்கு பல்வேறு வகைகளில் தடுப்புச் சுவர் அமைக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

Leave a Comment