சிரியாவின் இட்லிப் நகரப்போர் உலகத்தலைவர்களின் அதிர்வலைகள்

சிரியாவில் நடைபெற்றுவரும் ஏழு வருடகால உள்நாட்டுப் போரில் இறுதி யுத்தம் என்று வர்ணிக்கப்படும் இட்லிப் நகர தாக்குதல் ஆரம்பிக்கப்போகிறது.

தாக்குதலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி இட்லிப் நகரத்தையும் அங்கு வாழும் மூன்று மில்லியன் மக்களையும் சட்னி போட தயாரகிவிட்டார் சிரிய அதிபர் ஆஸாட்.

இந்த நிலையில் ஐ.நா சபையில் நேற்று பேசிய அமெரிக்காவின் ஐ.நாவுக்கான பிரதிநிதி நிக்கி கெலே அம்மையார் சிரிய அதிபர் ஆஸாட் நச்சு ஆயுதத்தை பாவிக்கப்போகிறார் என்று எச்சரித்துள்ளார். அவருக்கு பின்னால் மறைந்திருக்கும் ஈரான், ரஸ்யா நாடுகளையும் அவர் விட்டு வைக்கவில்லை.

ஆனால் சிரியா நாட்டு ஐ.நா பிரதிநிதி இதை வன்மையாக எதிர்த்துள்ளார். தாம் போராடுவது மேலை நாடுகள் போராடுவதைப் போலவே பயங்கரவாதிகளுக்கு எதிரான போர்தான் என்று சுட்டிக்காட்டினார்.

இட்லிப் நகரத்தில் அல் குவைடா, அல் நசுரா, ஐ.எஸ் பயங்கரவாதிகள் நிலை கொண்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து நாட்டை விடுவிக்கவே இந்தத் தாக்குதல் நடக்க இருப்பதாகவும், தாம் சர்வதேசத்தால் தடுக்கப்பட்ட நச்சு ஆயுதங்களை பாவிப்பதில்லை என்றும் அவர் பங்கிற்கு தெரிவித்தார்.

அதேவேளை இன்று ஈரானிய தலைநகர் தெகிரானில் ரஸ்ய அதிபர் புற்றின், துருக்கிய அதிபர் எர்டோகன், ஈரானிய அதிபர் ஹசன் றொவ்கானி ஆகிய மூவரும் இது தொடர்பாக வரக்கூடிய புதிய நிலைகள் குறித்து உச்சக்கட்ட பேச்சுக்களை நடத்துகிறார்கள்.

போர் வெடித்தால் துருக்கிக்குள் அகதிகள் பெருமளவில் வருவார்கள் இதை துருக்கிய அதிபர் விரும்பவில்லை. இதற்கு மேலும் அவரால் புதிய அகதிகளை சுமக்க முடியாது.

சிரிய அதிபர் போரை முடித்து தனது இருத்தலை நிலை நாட்ட வேண்டும் என்பதால் ரஸ்யாவின் பேச்சை ஓர் அளவுக்கு மேல் ஏற்கிறார் இல்லை. இதனால் தனக்குள்ள சர்வதேச அழுத்தங்களை அவரால் சமாளிக்க ஓரளவிற்கு மேல் முடியவில்லை.

ஈரானுக்கோ தனது சியா முஸ்லீம் மதத்தை கொண்ட ஆஸாட் வீழ்ந்து விட்டால் அடுத்த குறி ஈரானாக மாறிவிடும் என்ற பயம் இருக்கிறது. ஆகவே ஆஸாட்டின் இருத்தல் முக்கியம் என்கிறது.

சிரிய அதிபருக்கோ பொது மக்கள் பற்றி யாதொரு கவலையும் இல்லை அவருக்கு வேண்டியது வெற்றி. இருப்பினும் மிரட்டலுக்காக சிறிய அளவில் நச்சு ஆயுதத்தை அவர் பாவிக்க வாய்ப்புள்ளதாக ஒரு செய்தி கூறுகிறது. காரணம் அப்படி பாவித்து மிரட்டி பனிக் நிலையை உருவாக்கி வெற்றியை தனதாக்கிய அனுபவம் அவருக்கு உண்டு.

மறுபுறம் ரஸ்யாவே பிரிட்டனில் நச்சு ஆயுதம் பாவித்ததாக பிரிட்டன் குற்றம் சுமத்தியுள்ளது. தொகுத்தும் வகுத்தும் பார்த்தால் 21ம் நூற்றாண்டு போர்கள் நச்சு ஆயுதங்களுக்குள் நுழைந்து கொண்டிருப்பை கவலையுடன் அவதானிக்க முடிகிறது.

என்ன பேசியும் போரை நிறுத்தும்படி யாரும் கூறவோ அது நிற்கும் என்று உறுதியாக கூறவோ யாதொரு சமிக்ஞைகளும் காணப்படவில்லை.

நிறுத்தி அரசியல் தீர்வை கண்டால் மக்கள் தப்புவர். ஆனால் அதற்கான தடகள சூழல் அங்கு காணப்படவில்லை.

அலைகள் 07.09.2018 வெள்ளி

Related posts

Leave a Comment