எந்தவொரு திருப்பத்தையும் ஏற்படுத்த முடியாது போன பேரணி

அதிகாரத்தைக் கைப்பற்றப் போவதாகக் கூறிக்கொண்டு மக்கள் பேரணியை திரட்டிவந்தபோதும் பொதுஜன பெரமுனவினால் அதனைச் சாதிக்க முடியாது போனதாகவும், ஒரே இரவுக்குள் அவர்களது போராட்டம் சுருண்டுவிட்டதாகவும் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அவர்களது மக்கள் பேரணியால் எந்தவொரு வரலாற்றுத் திருப்பத்தையும் ஏற்படுத்த முடியாது என்றும் போராட்டம் வெறும் காற்றுப் போன பலூனாகி விட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

வளம் கொழிக்கும் பொருளாதார பலம்கொண்ட நாடாக இலங்கையை 2025 ஆம் ஆண்டாகும்போது மாற்றியமைக்கும் இலக்கு நோக்கிய பயணத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த இலக்கை வெற்றி கொள்ளும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியை வலிமை மிக்க கட்சியாக மாற்றியமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

கிராமிய மட்டத்திலிருந்து கட்சியை கட்டியெழுப்பும் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்திருப்பதாகவும் கட்சியின் அமைப்பாளர்கள் அதனைச் சரிவர நிறைவேற்ற வேண்டுமெனவும் அதற்கேற்ற அரசியலைச் செய்ய முடியாதவர்கள் ஒதுங்கிக்கொள்ளுமாறும் பிரதமர் எச்சரித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 72 வது வருடாந்த மாநாடு நேற்று வியாழக்கிழமை கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்றபோது ஆற்றிய பிரதான உரையின்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளை சில ஊடகங்கள் மூடிமறைக்கின்றன. வீடமைப்பு அமைச்சர் 138 வீடமைப்புத் திட்டங்களை அன்றைய தினம் திறந்துவைத்தபோதும் அவற்றை ஊடகங்கள் கண்டுகொள்ளத் தவறிவிட்டன. ஊடகங்களால் ஐக்கிய தேசியக் கட்சியை அழித்துவிட முடியாது. 72 வருடகாலப் பயணத்தின்போது கட்சியை அழிப்பதற்கு பல பிரயத்தனங்கள் எடுக்கப்பட்டபோதிலும் அது சாத்தியப்படவே இல்லை. ஜனநாயக விழுமியங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் ஒரு கட்சியாகவே ஐக்கிய தேசியக் கட்சி காணப்படுகின்றது.

1946 ஆம் ஆண்டு செப்டெம்பர் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கட்சி எமது கட்சி அக்கால கட்டத்தில் வேறு சில கட்சிகளும் காணப்பட்டன. ஆனால் மீதமாக இருப்பதும் பலம் கொண்டதுமான கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே காணப்படுகின்றது. இக்கட்சியின் உறுப்பினர்களாக நாம் இருப்பதையிட்டு பெருமைப்பட முடிகிறது.

தேசிய அரசாக 2015ல் ஐ.தே. க அதிகாரத்துக்கு வந்த நிலையில் கடன் சிக்கலுக்குள் இறுகிய நிலையிலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டோம். ஆனால் கடன் சுமையைக் கொண்ட பொருளாதாரத்தையன்றி கடனைத் திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதாரக் கட்டமைப்பை எமது எதிர்காலம் பரம்பரையினருக்குப் பெற்றுக்கொடுப்பதே எமது நோக்கமாகும்.

கம்பெரலிய, என்டர்பிரைஸ் லங்கா போன்ற வேலைத் திட்டங்களை ஆரம்பித்து அபிவிருத்திக்கு முன்னுரிமை கொடுத்திருக்கின்றோம்.

எதிர்காலத்தில் மேலும் பல அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் மயப்படுத்தவுள்ளோம் எனவும் இந்த மாநாட்டில் பிரதமர் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், கைவிடப்பட்ட வயல் போன்ற நாட்டையே 2015ல் பொறுப்பேற்றோம் மூன்றாண்டு காலத்தில் நல்ல விளைச்சலைக் கொண்ட பசுமையான வயல் வெளி போன்று மாற்றியமைக்க முடிந்துள்ளது. இது தான் எமது எதிர்பார்ப்பாகும். அன்று 1946ல் கட்சியை ஆரம்பித்தபோது முதலாவது தலைவரும், பிரதமருமான டி. எஸ். சேனாநாயக்க சொன்ன வார்த்தைகளை நாம் மீட்டிப்பார்க்கின்றோம். நாட்டை ஜனநாயக வழியில் முன்னெடுத்துச் செல்வதும் மக்களை சுபீட்சமாக வாழவைப்பதுவே அன்னாரது தூர நோக்காகிக்காணப்பட்டது.

எமது கட்சி தோல்விகளைக் கண்டு பயந்து ஓடியொழியும் கட்சியல்ல. வெற்றியின்போது நல்லாட்சியை முன்னெடுப்பதோடு தோல்வியின்போது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதுமே எமது சித்தாத்தமாகும். நாம் கடந்த காலங்களில் பல சவால்களுக்கு முகம்கொடுத்துள்ளோம். ஆனால் அவற்றைக் கண்டு துவண்டுபோகவில்லை. சவால்களுக்கு முகம்கொடுக்கும் பலம் எம்மிடமுண்டு. 2015ல் ஆட்சிமாற்றம் ஏற்பட்டிராவிட்டால் நாட்டின் இன்றைய நிலை எவ்வாறாக அமைந்திருக்கும் என்பதை நினைத்துப்பார்க்க முடியாது.

அரசாங்கத்தை சரியான பாதையில் முன்னெடுப்பது போன்று கட்சியையும் ஜனநாயக வழியில் கட்டமைத்து எமது எதிர்பார்ப்பை புதிய பரம்பரையிடம் ஒப்படைப்போம். புதிய தலைமைத்துவ சபை அதற்கான பணிகளை முன்னெடுத்து வருகின்றது.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலின்போது எமது கட்சி பின்னடைவைக் கண்டது. கட்சி ஆதரவாளர்களை கவனிக்கத்தவறியமையே அதற்கான காரணமாகும். இனிமேல் அதற்கு இடமளிக்கப்படமாட்டாது. கட்சிக்காக தியாகம் செய்துவரும் ஆதரவாளர்களை இனியொருபோதும் கைவிடமாட்டோம். அவர்களுக்கு எது கிடைக்கவேண்டுமோ அதனை கூடிய விரைவில் பெற்றுக்கொடுப்போம்.

2020ல் தனியான ஆட்சியை நிறுவி 2025ல தன்னிறைவு கொண்ட விழிப்பான நாடாக மாற்றியமைத்துககொண்டு 2030 வரை தொடர்ந்து ஆட்சிப் பயணத்தைத் தொடர்வோம்.

யார் என்ன சொன்னாலும், நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச் செல்ல எவருக்கும் இடமளிக்கப்போவதில்லை என்று பிரதமர் இங்கு உறுதிமொழி வழங்கினார்.

எம். ஏ. எம். நிலாம்

Related posts

Leave a Comment