மு.க.அழகிரியின் நோக்கங்கள் எதுவும் இல்லாத பேரணி..

தனக்கு ஆதரவாக நடந்த அமைதி பேரணியில் ஒன்றரை லட்சம் பேர் வந்ததாக, மு.க.அழகிரி தெரிவித்தார்.

மு.க.அழகிரி ஏற்கெனவே அறிவித்தபடி புதன்கிழமை அவரது தலைமையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடைபெற்றது. முன்னதாக, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களிலிருந்து பேரணிக்காக அழகிரி ஆதரவாளர்கள் வாகனங்களில் வந்திருந்தனர்.

பாதுகாப்புக்காக பேரணி நடைபெறும் பகுதி முழுவதும் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். ஆதரவாளர்கள் அழகிரி, அவரது மகன் துரை தயாநிதியின் உருவம் பொறித்த கருப்பு நிற உடைகளை அணிந்திருந்தனர்.

காலை 11.20 மணியளவில் அழகிரி, தன் மகன் துரை தயாநிதி, மகள் கயல்விழி ஆகியோருடன் வந்தார். அவருடைய ஆதரவாளர் இசக்கிமுத்து, மதுரை மாநகராட்சி முன்னாள் மேயர் மன்னன் உள்ளிட்டோருடன் அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் வாகனத்தில் பேரணியின் முன்னே வர தொண்டர்கள் பின்னால் வந்தனர்.

பேரணி திருவல்லிக்கேணி காவல்நிலையம் அருகில் இருந்து தொடங்கியது கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது. அங்கு, மு.க.அழகிரி, அவரது மகன் மற்றும் மகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையடுத்து, அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு மு.க.அழகிரி பதிலளித்தார்.

இந்த அமைதி பேரணியின் நோக்கம் என்ன?

எந்த நோக்கமும் கிடையாது. தந்தை, தலைவர் கருணாநிதியின் 30 ஆம் நாள் நினைவு நாளையொட்டி இந்த அமைதி பேரணியை நடத்தியிருக்கிறோம். இந்த பேரணிக்கு வந்திருந்த கருணாநிதியின் உண்மையான தொண்டர்களுக்கும், விசுவாசிகளுக்கும், பொதுமக்களுக்கும், அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியை அவர்களின் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

இந்த பேரணி மூலமாக உங்கள் பலத்தை காண்பிக்கிறீர்களா?

இது கருணாநிதியின் நினைவு நாளையொட்டிய அமைதி பேரணி.

உங்களை வரவேற்ற திமுக நிர்வாகி ரவி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாரே?

எனக்கு ஆதரவாக இப்போது ஒன்றரை லட்சம் பேர் வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் நீக்குவார்களா?

இவ்வாறு மு.க.அழகிரி கூறினார்.

Related posts

Leave a Comment